(எம்.எம்.சில்வெஸ்டர்)
பெருந்தோட்டத் துறையில் தொழில் புரியும் பெண் தொழிலாளர்களுக்கு குறைந்தளவு வேதனத்தை பெருந்தோட்ட முதலாளிமார் கொடுத்து வருவதால், பெண் தொழிலாளர்கள் 87 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பைப் பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இவ்வாறான அசாதாரண நிலைமையை இல்லாதொழிப்பதற்காக தோட்டத் தொழிலாளர்களது நலன்புரி மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான விசேட சட்ட மூலமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் மேலும் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத் தொகையை 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட நாள் தொடக்கம் தோட்ட உரிமையாளர்களால் தோட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு விதமான அசெளகரியங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அசாதாரண நிலைமைகள் தொடர்பாக தோட்ட உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள் அன்றாடம் முகங்கொடுத்து வரும் பல்வேறு விதமான பிரச்சினைகளை நேரடியாக தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கும்படி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
நிறுவன சட்ட திட்டங்களை மீறுவதன் காரணமாகவே பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணம் எனவும், இது தொடர்பில் நடத்தப்படவுள்ள விசாரணைகளுக்கு நாம் எதிர்க்கப்போவதில்லை.
மேலும், அனைத்து தோட்டங்களிலும் நாளந்த சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட்டு வருவதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு சித்திரைப் புத்தாண்டுக்கான 10 ஆயிரம் ரூபா முற்பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் குறிப்பிட்டிருந்தனர்.
No comments:
Post a Comment