அலிசா ஹீலி குவித்த சாதனைமிகு சதம் : 7ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது அவுஸ்திரேலியா - News View

About Us

About Us

Breaking

Sunday, April 3, 2022

அலிசா ஹீலி குவித்த சாதனைமிகு சதம் : 7ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது அவுஸ்திரேலியா

(நெவில் அன்தனி)

நடப்பு சம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 71 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா 7ஆவது தடவையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

அலிசா ஹீலி குவித்த சாதனைமிகு 170 ஓட்டங்கள், ரஷேல் ஹேய்ன்ஸ், பெத் மூனி ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் என்பன அவுஸ்திரேலியா உலக சம்பியனாவதற்கு வித்திட்டன.

இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் நெட் சிவர் தனி ஒருவராக போராடி சதம் குவித்து ஆறுதல் அடைந்தார்.

இவ் வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திவந்த அவுஸ்திரேலியா தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாகத் திகழ்ந்து உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இன்றைய இறுதிப் போட்டியிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியா மிகவும் கடினமான 357 ஓட்டங்களை வெற்றி இலக்காக இங்கிலாந்துக்கு நிர்ணயித்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அலிசா ஹீலியின் இரண்டாவது தொடர்ச்சியான சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 356 ஓட்டங்களைக் குவித்தது.

அலிசா ஹீலி 138 பந்துகளை எதிர்கொண்டு 26 பவுண்ட்றிகளுடன் குவித்த 170 ஓட்டங்களானது இருபாலாருக்குமான 50 ஓவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய தனிநபருக்கான எண்ணிக்கையாகும்.

அத்துடன் உலகக் கிண்ண அத்தியாயம் ஒன்றில் அரை இறுதிப் போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் சதம் குவித்த முதலாவது வீராங்கனை என்ற சாதனைக்கும் ஹீலி சொந்தக்காரர் ஆனார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது அரை இறுதிப் போட்டியில் அலிசா ஹீலி 129 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடிய அலிசா ஹீலி 2 சதங்கள், 2 அரைச் சதங்களுடன் 509 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார. இது மகளிர் உலகக் கிண்ண வரலாற்றில் ஓர் அத்தியாயத்தில் தனி ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

இதற்கு அமைய அலிசா ஹீலி ஆட்டநாயகி, தொடர்நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் சொந்தமாக்கிக்கொண்டார்.

மேலும் அவுஸ்திரேலியா பெற்ற 356 ஓட்டங்கள், மகளிர் உலகக் கிண்ண இறுதி ஆட்ட வரலாற்றில் பெறப்பட்ட சாதனைமிகு அதகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

இன்றைய இறுதிப் போட்டியில் முதலாவது விக்கெட்டில் ரஷேல் ஹேய்ன்ஸுடன் 160 ஓட்டங்களைப் பகிர்ந்த அலிசா ஹீலி, 2ஆவது விக்கெட்டில் பெத் மூனியுடன் மேலும் 156 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஹேய்ன்ஸ் 68 ஓட்டங்களையும் மூனி 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் அனியா ஷ்ரப்சோல் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 43.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 285 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தை தக்கவைக்கத் தவறியது.

ஆரம்ப வீராங்கனைகளான டெனி வைட் (4), டெமி போமன்ட் (27), அணித் தலைவி ஹெதர் நைட் (26) ஆகிய மூவரும் ஆட்டமிழக்க 15 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆனால், நட்டாலி ரூத் சிவர் திறமையாக துடுப்பெடுத்தாடி இங்கிலாந்துக்கு அவ்வப்போது உற்சாகம் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால், இறுதியில் அவரது முயற்சி பலனளிக்காமல் போனது.

3ஆவது விக்கெட்டில் ஹெதர் நைட்டுடன் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த நெட் சிவர், 4ஆவது விக்கெட்டில் அமி ஜோன்ஸுடன் மேலும் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அமி ஜோன்ஸ் 20 ஓட்டங்களுடன் 21ஆவது ஓவரில் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், நெட் சிவரும் சொபியா டன்க்லியும் 5ஆவது விக்கெட்டில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஆறுதலைக் கொடுத்தனர்.

எனினும் 34 ஓட்டங்கள் இடைவெளியில் 4 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து தடுமாறியபோது நெட் சிவருடன் 9ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சார்லட் டீன் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு சிறு அதிர்ச்சியைக் கொடுத்தார். ஆனால், சார்லட் டீன் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து கடைசி ஆட்டக்காரர் அனியா ஷ்ரப்சோல் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலியா சம்பியன் பட்டத்தை உறுதி செய்து கொண்டது.

நெட் சிவர் அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 15 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்களைப் பெற்று திருப்தி அடைந்தார்.

No comments:

Post a Comment