(நா.தனுஜா)
சாதாரண உழைக்கும் மக்களுக்குச் சொந்தமான ஊழியர் சேமலாப நிதியைக் கொள்ளையடிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, தமது கட்சியினால் சட்ட ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டமையினையிட்டு பெருமிதமடைவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (4) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது, நாடு தற்போது பாரிய டொலர் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருப்பதுடன் அதன் விளைவாக பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எனவே நாட்டில் தொழில் புரிவோருக்குச் சொந்தமான நிதியில் வரி அறவிடுவதன் மூலம் நிதியைத் திரட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
நாடளாவிய ரீதியிலுள்ள நிறுவனங்களில் வருடாந்தம் 2 பில்லியனுக்கு ரூபாவிற்கு அதிகமான வருமானத்தை உழைக்கும் நிறுவனங்களிடமிருந்து 25 சதவீத வரியை அறவிடுவதற்கான சட்ட மூலம் அரசாங்கத்தினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி தெற்காசியாவிலேயே அதிகளவு நிதியைக் கொண்டிருப்பதும் சுமார் 3 ட்ரில்லியனுக்கும் அதிகமான வருமானத்தையுடையதுமான ஊழியர் சேமலாப நிதியத்திடமிருந்து சுமார் 100 மில்லியன் ரூபா நிதியைத் திரட்டிக் கொள்வதற்கும் அதனைத் தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் சேமித்த சுமார் 60 ஆயிரம் கோடி நிதியைப் பாதுகாப்பதற்காக எமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே நீதிமன்றத்தை நாடியது. அதனூடாக அரசாங்கத்தின் முயற்சியை சட்ட ரீதியாகத் தோற்கடித்தமையினையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். எமது நடவடிக்கையின் மூலம் மக்களின் பொதுநிதியம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நினைவூட்டுகின்றன.
கிரீஸின் பிணையங்களில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்குச் சொந்தமான நிதியை முதலீடுசெய்து ஏற்பட்ட நட்டம் குறித்து இப்போது சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment