எம்மை பதவி நீக்கி அரசாங்கம் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது : நாங்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு தெரிவாகவில்லை - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Friday, March 4, 2022

எம்மை பதவி நீக்கி அரசாங்கம் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது : நாங்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு தெரிவாகவில்லை - உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

அடிப்படை திறனில்லாதவர் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நடைமுறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் எம்மை பதிவி நீக்கி அரசாங்கம் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பாதிப்பிற்கு யார் காரணம் என்பதை வெகுவிரைவில் ஆதாரபூர்வமாக பகிரங்கப்படுத்துவோம் என முன்னாள் அமைச்சர் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இலங்கையை இந்தோனேசியாவின் கிழக்கு திமோர் போன்று மாற்றியமைக்கும் ஒப்பந்தத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ செயற்படுத்துகிறார். அமெரிக்கரிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தை இனி தொடர்வோம் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றினைந்து நேற்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதார பாதிப்பு, மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அக்கறை கொள்ளாமலிருக்க எம்மால் முடியாது. ஏனெனில் நாங்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு தெரிவாகவில்லை.

மக்களாணைக்கு முரணாக மக்கள் பிரதிநியானவர்கள் நாட்டுக்கு இழைக்கும் துரோகத்திற்கு துணைபோக முடியாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அனைத்து உண்மைகளையும் பகிரங்கப்படுத்த தீர்மானித்தோம்.

பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு செயற்படுத்த வேண்டிய குறுகிய மற்றும் நீண்ட கால கொள்கைத் திட்டத்தை அரசாங்கத்திடம் முன்வைத்தோம்.

எமது யோசனைகளை செயற்படுத்துவதை விடுத்து அரசாங்கம் எம்மை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியுள்ளது. சுய கௌரவத்தை விட்டுக் கொடுத்து அமைச்சு பதவிகளை தொடர்ந்து வகிக்க முடியாது.

நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் எம்மை பதவி நீக்கி பிரச்சினைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அமைச்சரவை உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் எமது கருத்துக்களுக்கு அமைச்சரவையில் முன்னுரிமை வழங்கப்படவில்லை.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை ஆரம்பத்திலிருந்து கடுமையாக விமர்சித்துள்ளோம். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம், கொவிட் தாக்கம் தீவிரமடைந்துள்ள போது நாட்டை முடக்கமாறு வலியுறுத்தல், யுகதனவி விவகாரம் ஆகியற்றிற்கு கடுமையாக அழுத்தம் பிரயோகித்துள்ளோம்.

பொருளாதாரம் தொடர்பில் அடிப்படை திறனில்லாதவர் நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்குப்படுத்துவதால் தேசிய பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் திட்டமிட்ட வகையில் பாதிப்புக்குள்ளாக்கப்படுவதை பல்வேறு காரணிகள் ஊடாக அவதானிக்க முடிகிறது. நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை நாட்டு மக்களின் அழுத்தங்கள் ஊடாக செயற்படுத்தும் சூழலை ஏற்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையை இந்தோனேஷியாவின் கிழக்கு திமோர் போன்று மாற்றியமைக்கும் ஒப்பந்தத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ செயற்படுத்துகிறார். அமெரிக்கரிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தில் இனி ஈடுபடுவோம்.

திட்டமிட்ட வகையில் நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது. பொருளாதார பாதிப்பிற்கு யார் காரணம் என்பதை வெகுவிரையில் ஆதாரத்துடன் நாட்டு மக்களுக்கு அறிவிப்போம். எம்மை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியவுடன் பொருளாதாரம் முன்னேற்றமடையுமா என்றார்.

No comments:

Post a Comment