தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் : இனவாதத்தை உண்ண முடியுமா? இனவாதத்தால் ஒரு லீற்றர் டீசல் வழங்க முடியுமா? - ரணில் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் : இனவாதத்தை உண்ண முடியுமா? இனவாதத்தால் ஒரு லீற்றர் டீசல் வழங்க முடியுமா? - ரணில்

இலங்கையில் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமானால், புலம்பெயர் தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல ஐரோப்பிய அரசுகள் கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானதெனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது, சில, புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எமது ஆட்சியிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு பல அமைப்புகள் தடை செய்யப்பட்டன. எம்முடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமைப்புகளும் தடைப்பட்டியலில் இணைக்கப்பட்டன. அவை மீதான தடையை நீக்குமாறுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை நியாயமானது.

எமது ஆட்சியில் வேலை வாய்ப்பு இருந்தது, வருமானம் இருந்தது, உண்பதற்கு உணவு இருந்தது, ஆனால் தேசிய வாதம் பற்றி கதைத்தனர், நாட்டை மீட்போம் என சூளுரைத்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி கதைத்தனர். இறுதியில் தற்போது என்ன நடந்துள்ளது? இனவாதத்தை உண்ண முடியுமா? இனவாதத்தால் ஒரு லீற்றர் டீசல் வழங்க முடியுமா?

எனவே, இவ்வாறான அரசியலை விட்டு விடுவோம். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வை வழங்குவோம். தேரர்களும் இதனை வலியுறுத்துகின்றனர்.

புலிகளின் கதை முடிந்துவிட்டது. அவர்களால் மீண்டெழ முடியாது. புலம்பெயர் அமைப்புகளிடம் தற்போது நிதி இல்லை, தனி நபர்களிடம்தான் பண பலம் உள்ளது. புலம்பெயர் அமைப்புகளின் முதலீடு வந்தால் நல்லதுதான்.

குறிப்பாக இனப் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்தால், புலம்பெயர் தமிழர்களை விடவும் அதிக வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு வரும். ஐரோப்பிய அரசுகள் கூட முதலீடுகளை மேற்கொள்ளும். 

அதேவேளை, எமது ஆட்சியில் புதிய அரசமைப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 07 மாகாண முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டுமென யோசனை முன்வைத்தனர்.

இவர்கள், அனைவரும் சிங்களவர்கள், தீவிரவாதிகள் கிடையாது. அதேபோல முதல்வர்கள் ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்தவர்களும் அல்லர். இந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றது. இது பற்றி கலந்துரையாடலாமெனவும் கூறியது. 

சுசில் பிரேம ஜயந்த தலைமையில் இது தொடர்பில் ஆவணம் தயாரிக்கப்பட்டது. அந்த ஆவணம் குறித்து கலந்துரையாடி தீர்வை முன்வைக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment