அந்நிய செலாவணியை நிர்வகிப்பதற்கு தீர்க்கமான ஒழுக்க கட்டுப்பாடுகள் அவசியம் : வாசுதேவ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Monday, March 7, 2022

அந்நிய செலாவணியை நிர்வகிப்பதற்கு தீர்க்கமான ஒழுக்க கட்டுப்பாடுகள் அவசியம் : வாசுதேவ நாணயக்கார

அமீன் எம் ரிலான் 

நாட்டில் தற்போது உருவெடுத்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு, மின் துண்டிப்பு மற்றும் டொலர் தட்டுப்பாடுகளுக்கு அந்நிய செலாவணி கொள்கையை சீரான முறையில் நிர்வகிக்காதமையே பிரதான காரணமாகும். இதன் காரணமாக நாட்டுக்கு அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்து எமது அந்நிய செலாவணியை சீரழித்து விட்டனர். எனவே நாட்டின் பிரதான நிதி மையமாக கருதப்படும் அந்நிய செலாவணியை தீர்க்கமான ஒழுக்க கட்டுப்பாடுகளுடன் நிர்வகிக்க வேண்டும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் (05) நடைப்பெற்ற அகில இலங்கை ஐக்கிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் முதலாவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில், நமது நாட்டிலுள்ள பணம் மிகவும் சூட்சமமான முறையிலும் பெரும் வர்த்தக புள்ளிகள் மூலமாவும் வெளிநாடுகளுக்கு பெருக்கெடுத்து செல்கின்றன. நாட்டு மக்கள் தமது சக்தியின் மூலம் கட்டியெழுப்பிய உற்பத்திகளை வர்த்தகர்கள் கொள்ளையடித்து நாட்டின் அந்நிய செலாவணியை சீரழித்து வருகின்றனர். 

தற்போது ஒன்லைன் மூலம் வெளிநாட்டவர்கள் பொருட்களை கொள்முதல் செய்வதன் ஊடாகவும் அதிகளவில் அந்நிய செலாவணி இல்லாமல் போகின்றது. டொலர் அதிகளவில் வெளிநாடுகளுக்கு செல்கின்றன. இதன் காரணமாகவே குறித்த வர்த்தகர்களை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என நாம் தொடர்ந்து கூறி வருகின்றோம். 

எமது நாட்டு சொத்துக்கள் வர்த்தகர்களின் தேவையின் பிரகாரம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு இடமளித்துவிட்டு இனிமேலும் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவே அந்நிய செலாவணியை புதிய தரத்திற்கு ஏற்ற வகையில் நிர்வகிக்க வேண்டும்.

அந்நிய செலாவணியை நிர்வகிப்பதற்கான சட்டமூலம் நாட்டில் உள்ளது. அந்த சட்டமூலத்தை உடைத்தெறிந்து பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு இடமளித்தனர். இது பொதுமக்களின் நலனுக்காக செய்யவில்லை. அதற்கு மாறாக தனிப்பட்ட ரீதியில் நட்புறவாடும் வர்த்தகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்குமே அந்த வாய்ப்பை வழங்கினர். 

இந்தியாவில் எவருக்கும் நினைத்த மாதிரி பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது. வெளிநாடுகளில் ஈட்டும் வருவாயை இந்தியாவுக்கு அனுப்பாமல் இருக்கவும் முடியாது. இந்தியாவில் அந்திய செலாவணிக்காக கடுமையான ஒழுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் எமது நாட்டில் புதிய லிபரல்வாதத்தின் பிரகாரம் பணம் வெளிநாடுகளுக்கு இலகுவாக செல்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு நடைமுறை வங்கி கணக்கொன்றை திறக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் சட்டமொன்று உள்ளது. இந்த சட்டத்தின் பிரகாரம் எந்த கட்டுப்பாடுகளும் தடையும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்ப முடியும். 

இந்த நிலைமையை ஏற்படுத்துமாறே ஒரு சிலர் தற்போது தர்க்கம் புரிகின்றனர். இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் நாடு இன்னும் அதல பாதாளத்திற்கு செல்லும். இந்த நிலைமையில் இருந்து நாட்டை பாதுகாக்க அரசாங்கத்தில் இருந்து கொண்டு பல சந்தர்ப்பங்களில் தீர்வுகளை நாம் முன்வைத்தோம்.

இவ்வாறான நிலைமையில் நாட்டை சரியான பாதைக்கிட்டு செல்வதற்கு எமது தொழிற்சங்க தலைவர்கள் ஒன்றிணைந்து அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு மையத்திற்கு இணைத்து அகில இலங்கை ஐக்கிய தொழிற்சங்க மத்தியநிலையத்தை உருவாக்கியமை பாராட்ட வேண்டிய நடவடிக்கையாகும் என்றார்.

இந்த நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரன, வீரசுமன வீரசிங்க ஆகியோரும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் தொழிற்சங்க தலைவர்களும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பல் அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை தயாரித்து அரசாங்கத்திடம் முன்வைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment