பதவியிலிருந்து விலகப் போவதில்லை, கடைசி பந்து வரை ஆடுவேன் : நான் யாருக்கு முன்பும் தலை குனிய மாட்டேன், என் மக்களை தலை குனியவும் விட மாட்டேன் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

பதவியிலிருந்து விலகப் போவதில்லை, கடைசி பந்து வரை ஆடுவேன் : நான் யாருக்கு முன்பும் தலை குனிய மாட்டேன், என் மக்களை தலை குனியவும் விட மாட்டேன் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை மாலையில் அந்நாட்டு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றும்போது, சமீபத்திய நெருக்கடி காரணமாக தமது பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், கடைசி பந்து வரை ஆடுவேன் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இம்ரான் கான் அரசு, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக வாக்கெடுப்பு நடப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், இம்ரான் கான் தொலைக்காட்சியில் பேசும்போது, என் பாகிஸ்தானியர்களே, இன்று நான் உங்களுடன் ஒரு மிக முக்கியமான விஷயத்தை பகிர விரும்புகிறேன். அதை நேரலையில் செய்ய முடிவு செய்துள்ளேன். இது பதிவு செய்யப்பட்ட காணொளி கிடையாது. இது பாகிஸ்தானின் எதிர்காலம் பற்றியது. பாகிஸ்தானுக்காக முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. எங்களிடம் இரண்டு வழிகள் உள்ளன. எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

நான் உங்களிடம் மனம் விட்டு பேச விரும்புகிறேன். என்னைப் போன்ற ஒருவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை மக்களிடம் சொல்ல விரும்புகிறேன். ஒரு தலைவரின் வாழ்க்கையைப் பார்த்தால் அரசியலுக்கு வருவதற்கு முன் அவரை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்பது தெரியும். அதேபோல அரசியலுக்கு வருவதற்கு முன் சாதித்தவர்கள் மிகக் குறைவு.

காயிதே அசாம் ஜின்னா மிகப் பெரிய அரசியல்வாதி. ஆனால் தலைவராக ஆவதற்கு முன்பு, அவர் இந்தியாவில் ஒரு பெரிய வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டார், அவருக்கு என அந்தஸ்து இருந்தது. இப்போது அரசியலுக்கு வருபவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்கள் அரசியலுக்கு வரும் முன்பு அவர்களின் பெயர்கூட வெளியே தெரியாது.

நான் ஒரு அதிர்ஷ்டசாலி. அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்னிடம் பணம், புகழ் எல்லாம் இருந்ததற்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன். இன்றும் எனக்கு எதுவும் தேவையில்லை.

அடிமைத்தனத்தை எதிர்க்கிறேன்
சுதந்திர பாகிஸ்தானில் பிறந்த முதல் தலைமுறை பாகிஸ்தானியர்களில் நானும் ஒருவன். பாகிஸ்தான் என்னை விட ஐந்து வயதுதான் மூத்தது. என் பெற்றோர் அடிமை காலத்தில் பிறந்தவர்கள். என் தந்தை பாகிஸ்தானிய இயக்கத்தில் பங்கேற்றார். சுதந்திர நாட்டில் பிறந்த நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அவர் எப்போதும் என்னை உணர வைப்பார். நேர்மையான மனிதர்களாக இருந்தவர்கள், ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை மிகவும் மோசமாகக் கண்டனர். நேர்மை என்றால் என்ன என்று சிறு வயதில் இருந்தே சொல்லப்பட்டிருக்கிறோம். நேர்மை ஒரு சுதந்திர தேசத்தின் அடையாளம்.

நான் ஏன் அரசியலுக்கு வந்தேன்? நான் அரசியல் மாணவனாக இருந்ததால் பல்கலைக்கழகத்தில் அரசியல் படித்தேன். அல்லாமா இக்பால் கனவு கண்டது போல் நம் நாடு மாறவே முடியாது என்று நினைத்ததாலேயே நான் அரசியலுக்கு வந்தேன்.

நான் அவரைப் போல ஒரு தலைவராக இருக்க விரும்பினேன். இந்த கனவுக்காக அவர் போராடியது போல் நானும் போராட விரும்பினேன். அவர் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பாகிஸ்தானுக்காக போராடினார். பாகிஸ்தானுக்கு என பெரிய நோக்கம் இருந்தது. நாம் ஒரு இஸ்லாமிய ஃபலாஹி சமஸ்தானமாக மாற வேண்டியிருந்தது. இதுதான் பாகிஸ்தான் உருவாவதற்கு காரணம்.

நமது தேசத்தை கட்டியவர்கள் இஸ்லாமிய அரசை உருவாக்க வேண்டும் என்று எழுதியுள்ளனர். இஸ்லாமிய அரசைப் பற்றிப் பேசும் போதெல்லாம் மதீனாவை பற்றித்தான் பேசுகிறோம். இது இஸ்லாத்தின் பொற்காலம். நான் அரசியலில் ஈடுபடத் தொடங்கியதில் இருந்து எப்போதும் ஒன்றைத்தான் சொல்லி வருகிறேன். நான் யாருக்கு முன்பும் தலைகுனிய மாட்டேன். என் மக்களை தலை குனியவும் விட மாட்டேன். அதாவது, என் மக்களை அடிமைகளாக இருக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை
நான் ஆட்சிக்கு வந்ததும், நமது வெளியுறவுக் கொள்கை சுதந்திரமாக இருக்கும் என்று முடிவு செய்தேன். சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் அர்த்தம் அது பாகிஸ்தானின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். நாம் யாருக்கும் எதிரியாக இருப்போம் அல்லது யாரையும் எதிர்ப்போம் என்பதல்ல சுதந்திர வெளியுறவுக் கொள்கை.

இந்தியாவில் உள்ளவர்கள், பாகிஸ்தானியர் ஒருவரை அதிகம் அறிந்தவராக இருந்திருந்தால் அது நானாகவே இருப்பேன். அங்கு எனக்கு நண்பர்கள் இருந்ததால் மட்டுமல்ல. என்னை அவர்கள் கிரிக்கெட் மூலம் நன்கு அறிந்திருந்தார்கள்.

எனக்கு அமெரிக்காவை நன்றாக தெரியும். அவர்களின் அரசியலையும் தலைவர்களையும் தெரியும். பிரிட்டன் எனக்கு இரண்டாவது வீடு போன்றது.

நான் எந்த மனித சமுதாயத்திற்கும் எதிராக இருக்க முடியாது. ஆம், அவர்களின் தவறான கொள்கைகளை நாங்கள் விமர்சிக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் பங்கேற்ற போது. ஜெனரல் முஷாரப் அந்த முடிவை எடுத்தபோது நான் அந்தக் கூட்டத்தில் இருந்தேன்.

அமெரிக்காவை ஆதரிக்கவில்லை என்றாலும் கூட, அவர்கள் நம்மை கொல்லக்கூடாது என்று எங்களிடம் கூறப்பட்டது. 9/11க்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அப்போதும் சொன்னேன். தீவிரவாதத்திற்கு எதிராக அவர்களுக்கு உதவ வேண்டும், ஆனால் அதற்கு பாகிஸ்தானியர்களை பலி கொடுக்க வேண்டுமா என்று கூறினேன்.

80 களில், பாகிஸ்தான் அமெரிக்காவின் முன்னரங்க கூட்டு நாடாக மாறியது. நாங்கள் ரஷ்யாவுக்கு எதிராக போர் தொடுத்தோம். நாங்கள் முஜாஹித்களை தயார் செய்து, ஆப்கானிஸ்தானில் ரஷ்யா ஆட்சி செய்வதால் நாங்கள் ஜிஹாத் செய்கிறோம் என்று சொன்னோம்.

அந்த ஜிகாத் முடிந்தவுடன், சோவியத் தோற்கடிக்கப்பட்டு, அமெரிக்கா வெளியேறியது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நமக்கு நண்பனாக இருந்த அதே அமெரிக்கா, நம் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. நாம் யாருக்காக போராடினோமே அதே அமெரிக்கா நம் மீது தடைகளை விதித்தது, என்றார் இம்ரான் கான்.

கடைசி பந்து வரை ஆடுவேன்
நவாஸ் ஷெரீப், பொது நிதியில் தனக்கென பல தொழிற்சாலைகளைக் கட்டியதாகவும், பின்னர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ததாக கூறினார்.

அனைத்து வளர்ந்த நாடுகளுக்கும் பொதுவான ஒன்று உள்ளது - அனைத்து குற்றவாளிகளும், எவ்வளவு செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுகிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் அப்படி இல்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு எதுவாக இருந்தாலும், நான் வலுவாக மீண்டு வருவேன். பாகிஸ்தானின் எதிர்காலம் குறித்து ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாக்கெடுப்பு பாகிஸ்தான் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும். நான் பதவி விலக மாட்டேன், கடைசி பந்து வரை போராடுவேன். இந்த நாட்டுக்கு இப்போது நடக்கும் துரோகத்தை அனுமதிக்க மாட்டோம்.

இதுவரை என்ன நடந்தது?
பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதில், இம்ரான் கானின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முத்தஹிதா காமி இயக்கம் பாகிஸ்தான் கட்சி விலக்கிக் கொண்டதால் அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பட்டியலிடப்பட்ட விஷயங்களை விவாதிக்க அதன் துணை சபாநாயகர் காசிம் சூரி எம்.பி.க்களை கேட்டுக் கொண்டார். ஆனால், நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது உடனடியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எம்.பிக்கள் கோரினார்கள். அதற்கு துணை சபாநாயகர் அனுமதி மறுக்கவே அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை நாடாளுமன்ற அலுவலை ஒத்திவைப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார்.

முன்னதாக, இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷரிஃப் மார்ச் 28ஆம் திகதி தாக்கல் செய்தார். அதில் 161 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர். அதே நாளில் தீர்மானம் மீதான விவாதத்தை நடத்தவும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரம் மீதான நாடாளுமன்ற அலுவல், வியாழக்கிழமை நான்காவது விஷயமாக பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 3ஆம் திகதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment