ஒமிக்ரோன் வேகமாக பரவுவதால் வைத்தியசாலைகளில் நெருக்கடி : தாமதமின்றி மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தும் சுகாதார தரப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 1, 2022

ஒமிக்ரோன் வேகமாக பரவுவதால் வைத்தியசாலைகளில் நெருக்கடி : தாமதமின்றி மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தும் சுகாதார தரப்பு

(எம்.மனோசித்ரா)

ஒமிக்ரோன் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகின்றமையால் கொவிட் தொற்றாளர்களுடன், ஏனைய நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வைத்தியசாலைகளில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கு அனைவரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் கீதால் பெரேரா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏனைய வைரஸ்களுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரோன் மிகவும் வேகமாகப் பரவுகின்றமையால் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனால் வைத்தியசாலைகளில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. காரணம் கொவிட் நோயாளர்கள் அனுமதிக்கப்படும் விடுதிகளில் ஏனைய நோயாளர்களை அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே இதய நோய் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு ஒட்சிசன் தேவையுடைய நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறான நோயாளர்கள் இருக்கும் பகுதிகளில் கொவிட் நோயாளர்களை அனுமதித்தால் அது அபாயம் மிக்கதாகும்.

எனவே சகலரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தற்போது நாட்டிலுள்ள பெரும்பாலான தொற்றாளர்கள் தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமலேயே வீடுகளில் உள்ளனர். இது ஏனைய நோயாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தவிர தற்போது கொவிட் தொற்றுக்கு பின்னரான நோய் நிலைமைகளும் ஏற்படுகின்றன.

சிலருக்கு தொற்றின் போது எவ்வித அறிகுறிகளும் காண்பிக்காத போதிலும் , சுமார் 4 வாரங்களின் பின்னர் ஏனைய நோய் நிலைமைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தென்படுபவர்கள் பொறுத்தமான வைத்தியரை நாடி உரிய ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment