எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் : நாம் எந்தவொரு அபிவிருத்தியையும் இடைநிறுத்தாமலேயே 30 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்தோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, March 6, 2022

எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் : நாம் எந்தவொரு அபிவிருத்தியையும் இடைநிறுத்தாமலேயே 30 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்தோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நினைவு பலகையை திறந்து வைத்து நாரம்மல பிரதேச சபையின் புதிய கட்டடத்தை நேற்று (05) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் இதன்போது நாரம்மல பிரதேச சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தையும் narammalaps.dolgnwp.lk வெளியிட்டு வைத்தார்.

நாரம்மல பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில் 133 மில்லியன் ரூபாய் செலவில் புதிய இரண்டு மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் புற நெகும திட்டமும் பிரதேச சபையின் நிதியும் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, நாரம்மல பிரதேச சபையின் புதிய கடடிடத்தை திறந்து வைக்க கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

பணியாற்றுவதற்கு சிறந்த சூழல் காணப்பட வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். மழை பெய்யும் போது நனையும் இடத்தில் பழைய கட்டடங்களில் அலுவலக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. எனவே ஒவ்வொரு பிரதேச சபைக்கும் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி மக்களை சிறந்த சூழலில் பணிபுரியச் செய்ய வேண்டும்.

ஒரு பக்கம் போர் தொடுத்தாலும் மறுபுறம் அரசு கட்டிடங்கள், வீதிகள் போன்றவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். அதற்கு இன்று பலன் கிடைத்துள்ளது என நம்புகிறேன். 
குறிப்பாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி தொடங்கிய போது, நெடுஞ்சாலைகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அன்று குற்றம் சாட்டியவர்கள் இன்று அந்த வீதிகளில் பயணிக்கும் போது குற்றஞ்சாட்டுவதை நாம் அறிவோம். 

அப்போது குருநாகலை அடைய எத்தனை மணி நேரம் ஆனது? இன்று எவ்வளவு நேரம் செலவாகும்? அன்று காலை வேளையில் வரும்போது மெதமுலனவிலிருந்து கொழும்புக்கு வரும் வழியில் இடைநடுவில் உணவு அருந்திவிட்டே பயணிப்போம். அப்போது பழுதடைந்த வீதிகளே இருந்தன. ஆனால் ஒன்றரை அல்லது இரண்டு மணித்தியாலங்களில் கொழும்பு வந்து சேருகிறோம்.

இவ்வாறாக நாம் நாட்டின் அபிவிருத்தியை ஆரம்பித்தோம். போர் இடம்பெறும் போதே நாம் இதனை செய்தோம். நாம் எந்தவொரு அபிவிருத்தியையும் இடைநிறுத்தாமலேயே 30 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்தோம்.

மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொடுத்து வேலை செய்வதுடனேயே நாம் போரையும் முடிவுக்கு கொண்டு வந்தோம். அதனால்தான் இன்று சுதந்திரமாக வந்து சுதந்திரமாக பேசி சுதந்திரமாக நடமாடி முடிகிறது.

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கருத்துக்களை தெளிவாக கூறி தனது நாட்டை ஒரு திசையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். நாம் அனைவரும் பிரதமராக, அமைச்சர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மற்றும் அரச ஊழியர்களாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

டிஜிட்டல் மயமாக்கல் போன்ற புதிய முறைகளில் நாம் முன்னேறி வருகிறோம். நாம் எமது நாட்டையும் எமது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் முறையாக மேம்படுத்தப்பட வேண்டும். 

சுமார் 98 சதவீத மின்சாரம் வழங்கப்படும் போது, அதே முறையில் நுகர்வோருக்கு தண்ணீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் அரசாங்கம் தற்போது அந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
எனவே, இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கும் நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். நமது வருங்கால சந்ததியினரை பாதுகாக்க நாமும் உழைக்க வேண்டும்.

இன்று போதைப் பொருள் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. நமது பிள்ளைகளை பாதுகாக்க போதைபொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிடின், நம் தேசத்தை அழிப்பதற்காக அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்போரை நாம் அடக்காவிட்டால், நம் பிள்ளைகள் பெரும் சிக்கலுக்கு ஆளாக நேரிடும். 

எனவே போதைப் பொருளில் இருந்து மக்களை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுப்போம். மேலும் நமது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தமது பிள்ளைகள் குறித்து சில பெற்றோர் அவர்களது சிறு வயதில் அதிக கவனம் செலுத்துகின்ற போதிலும், அவர்கள் உயர் வகுப்புக்கு செல்லும் போது அவர்கள் மீதான கவனம் குறைந்து விடுகிறது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அவர்களது போக்கில் விட்டுவிட்டு தமது வேலையைத் தொடர்கிறார்கள்.

பிள்ளைகளை சிறு வயதை விட அவர்கள் பெரியவர்களாக வளரும் போதே அவர்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே அவர்கள் இளைஞர்களாக வளர்ந்து நிற்கும் போது அவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரதும், பெரியோரதும் கடமையாகும். அவ்வாறு செய்யாவிடின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். 

எனவே நாம் எமது பிள்ளைகளை பாதுகாத்து தேசத்தை கட்டியெழுப்பி இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் குறிப்பாக இப்பிரதேசத்திலுள்ள உங்கள் அனைவரதும் ஆதரவை எதிர்பார்ப்பதுடன், குறிப்பாக இப்பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது கௌரவத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். 

விசேடமாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாட்டுக்காகவும் தேசத்துக்காகவும் தனது பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார். அதற்காக நாம் அவரை குறிப்பாக கௌரவிக்க வேண்டும். மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நாட்டின் சாலை வலையமைப்பு மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் அவர் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றமை எமக்கு பெரும் ஆறுதலாக உள்ளது என பிரதமர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment