கடந்த 6 நாட்களாக எந்தவொரு சமயல் எரிவாயு சிலிண்டரையும் சந்தைக்கு விநியோகிக்கவில்லை என பிரதான சமையல் எரிவாயு விநியோக நிறுவனமான ' லிட்ரோ ' நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், பல பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உணரப்பட்டுள்ளது.
தகனச்சாலைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள், பேக்கரிகள் என அவற்றுக்கும் எரிவாயு விநியோகம் கடந்த 6 நாட்களில் இடம்பெறவில்லை என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்வாறான நிலையில் நாட்டில் பல உணவங்கள், சுமார் 1,000 க்கும் அதிகமான பேக்கரிகள் சமயல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன. பல உணவகங்களில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
லிட்ரோ நிறுவனமானது நாளொன்றுக்கு 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் நிலையில் கடந்த மார்ச் முதலாம் திகதி முதல் அந்த விநியோக நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளன.
இதனிடையே நாட்டில் லாப் சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு காணப்படும் நிலையில், நிலவும் டொலர் பிரச்சினை இடையே இனி மேல் சமையல் எரிவாயு இறக்குமதி தொடர்பில் தாம் இருமுறை சிந்திக்கப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நாட்டுக்கு தேவையான எரிவாயுவை தாங்கிய 3 கப்பல்கள் இலங்கை கடலில் கடந்த 6 நாட்களாக நங்கூரமிட்டுள்ளன.
எனினும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்கள் இதுவரை வங்கிகளால் வெளியிடப்படாத நிலையில், கப்பலில் உள்ள எரிவாயுவை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் நாளொன்றுக்கு 15 ஆயிரம் அமரிக்க டொலர்கள் வீதம் ஒவ்வொரு கப்பலுக்கும் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக எரிவாயு இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments:
Post a Comment