ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தமே அரசாங்கத்தின் உடனடி மாற்றத்திற்கு காரணம் : மாறிமாறி ஆட்சியில் அமர்ந்தவர்கள் நீதித்துறையில் அரசியல் தலையீட்டை செய்துள்ளனர் என்பதே உண்மை - சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Friday, February 11, 2022

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தமே அரசாங்கத்தின் உடனடி மாற்றத்திற்கு காரணம் : மாறிமாறி ஆட்சியில் அமர்ந்தவர்கள் நீதித்துறையில் அரசியல் தலையீட்டை செய்துள்ளனர் என்பதே உண்மை - சுமந்திரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்தும் சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டு வரவும், பிரபலமான நபர்கள் சிலர் பிணையில் விடுவிக்கப்படவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய சில அமைப்புகளின் அழுத்தமே காரணமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ. சுமந்திரன் தெரிவித்தார்.

இசை நாற்காலி போன்று ஆளும், எதிர்க்கட்சிகள் மாறிமாறி ஆட்சியில் அமர்ந்து நாட்டின் சுயாதீன நீதித்துறையில் அரசியல் தலையீட்டை செய்துள்ளனர் என்பதே உண்மையாகும். இதுவே நாட்டின் இன்றைய நிலைமைக்கும் காரணமாகும் எனவும் அவர் விமர்சித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகளை (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், எமது நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் தெரிவிக்காதுள்ளது. இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்படாத நிலையொன்று இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் கேள்வி கேட்கையில் அது குறித்து எந்த பதிலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

அரசியல் அமைப்பின் 148 ஆம் உருப்புரைக்கு அமைய பொதி நிதி அதிகாரம் முழுமையாக பாராளுமன்றத்திற்கே உள்ளது. எனவே பாராளுமன்றத்திற்கு முழுமையான தகவல்களை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் அது எமது கடமையில் இருந்து விடுபடுவதாக அமைந்துவிடும்.

தற்போது வெளிவிவகாரத் துறை அமைச்சர் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்கும் சட்ட மூலத்தை சபைப்படுத்தியுள்ளார். இந்த சட்டம் 1979 ஆம் ஆண்டு கொண்டவரப்பட்ட வேளையில் தற்காலிக சட்டமாக ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதாக கூறியே அரசாங்கம் கொண்டுவந்ததாக பத்திரிகைகளில் வாசித்தோம்.

இதுவொரு தற்காலிக சட்ட மூலம் எனவும், ஆறு மாத காலத்திற்கே இது நடைமுறையில் இருக்கும் எனவும் கூறினாலும் இன்று வரை 42 ஆண்டுகளாக இந்த சட்டத்துடன் வாழ வேண்டியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தல்களுக்கு அமையவும், புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியதற்கு அமையவுமே இப்போது வெளிவிவகாரத் துறை அமைச்சர் திருத்த சட்ட மூலத்தை முன்வைத்துள்ளார். இதற்கு மறுசீரமைப்பு என பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அமைச்சரை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த வேளையிலும், மறுசீரமைப்பு என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் தேட வேண்டியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதனை அவர் மறுக்கவும் இல்லை. இந்த திருத்த சட்டத்தில் புதிதாக எதுவுமே மறுசீரமைக்கப்படவில்லை. இங்கு திருத்தங்கள் என கூறப்பட்டுள்ள சகல விடயங்களும் ஏற்கனவே அவ்வாறே உள்ளது.

18 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள என்பதை 12 மாதங்களாக குறைக்க நடவடிக்கை எடுத்ததாக கூறுகின்றனர், எமக்கு தெரிய 18 ஆண்டுகளுக்கு மேலாக சிலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சிலரை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. கவிஞர் அஹ்னாபும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த விடுதலைகளும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அமைப்புகள் மூலமாக பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு இவர்களின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டதன் காரணமாகவே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் மேலும் பலர் இவ்வாறு உள்ளனர், இருபது, இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளாக உள்ளனர். குறைந்தபட்சம் 300-400 பேர் இன்றைய சூழ்நிலையிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளனர். அவர்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. ஒரு இருவரது வழக்குகளே எப்போதும் பிரபல்யமாக பேசப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

எனவே இந்த சட்டத்தை முழுமையாக நீக்க அல்லது மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

மேலும் தற்போது நீதி அமைச்சர் சில சட்டங்களை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அதனை வரவேற்கிறோம். அதேபோல் சட்ட தாமதங்கள் ஏற்படுவதில் சட்டத்தரணிகள் பக்கமும் குறைகள் உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவர்கள் மட்டுமல்ல இந்த பொறிமுறையிலும் தவறு உள்ளது.

அதனை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் சட்டத்துறை, நீதி சுயாதீனமே ஜனநாயகத்தின் அத்திவாரமாகும். இங்கேதான் சாதாரண மக்கள் தமக்கான நியாயத்தை பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமல்ல நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்தில் தலையிடுவதாக இரண்டு அரசியல் தப்பும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டுள்ளனர்.

நாங்கள் நீதிமன்ற சுயாதீனதில் தலையிடவில்லை நீங்களே தலையிடுகின்றீர்கள் என மாறிமாறி குற்றம் சுமத்திக் கொண்டுள்ளீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இரண்டு தரப்புமே இந்த தவறினை செய்துள்ளீர்கள். இரண்டு தரப்புமே சுயாதீன நீதித்துறையில் தலையிட்டுள்ளீர்கள்.

இசை நாற்காலி போன்று இரண்டு தர்பபினரும் மாறிமாறி அமர்ந்து நாட்டின் சுயாதீன நீதித்துறையில் அரசியல் தலையீட்டை செய்துள்ளீர்கள் என்பதே உண்மையாகும். ஆகவே இரண்டு தர்பபினரும் மாறிமாறி ஒருவருக்கு ஒருவர் கூறும் குற்றச்சாட்டுக்கள் உண்மையாகும். இதுவே நாட்டின் இந்த நிலைமைக்கு காரணமாகும்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது, நீதித்துறையும் அதே நிலைக்கு வந்துள்ள இந்த நேரத்திலாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பேதம் மறந்து சரியான மாற்றத்தை உருவாக்குவோம், நாம் இதனை செய்யாது போனால் நாட்டு மக்களே அதனை செய்வார்கள். இதுவே புரட்சிகளின் வரலாறுகள் என்பதையும் கூறிக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment