சுதந்திர தினத்தில் ஆர்வம் குறைவு, இதன் மூலம் மக்கள் கூறும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் : திறமையான அதிகாரிகளைப் புறந்தள்ளி, இராணுவத்தினரை முன்னிறுத்திச் செயற்பட்டமையும் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் - கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Friday, February 11, 2022

சுதந்திர தினத்தில் ஆர்வம் குறைவு, இதன் மூலம் மக்கள் கூறும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் : திறமையான அதிகாரிகளைப் புறந்தள்ளி, இராணுவத்தினரை முன்னிறுத்திச் செயற்பட்டமையும் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் - கரு ஜயசூரிய

(நா.தனுஜா)

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் மிகக்கோலாகலமான முறையில் நடாத்தப்பட்ட போதிலும், அது குறித்த மக்களின் ஆர்வம் பெருமளவிற்கு வீழ்ச்சி கண்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது. அதன் மூலமும் மக்கள் ஒரு செய்தியைக் கூறுகின்றார்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதனடிப்படையில் தமது கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் கொழும்பில் வியாழக்கிழமை (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஆற்றிய உரையை நாம் மிகவும் கவனமாக செவிமடுத்தோம். அதன்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான இயலுமை அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.

தற்போது நாடளாவிய ரீதியில் விவசாயிகள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி தொடர்பில் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லாவிடினும், ஜனாதிபதி என்ற வகையில் இப்பிரச்சினைக்குரிய தீர்வை வழங்க வேண்டிய கடப்பாடு அவருக்கு இருக்கின்றது. மக்கள் எதிர்கொண்டிருக்கும் துன்பங்களையும் அவர்களது கோபத்தையும் நாம் புரிந்து கொள்வது அவசியமாகும்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது முகங்கொடுத்திருக்கும் பாரிய வீழ்ச்சிக்கான பிரதான காரணம் அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகமும் அரச சேவை அரசியல் மயமாக்கப்பட்டமையினால் ஏற்பட்ட நெருக்கடிகளுமேயாகும்.

அரச சேவையில் பணி புரியும் திறமையான அதிகாரிகளைப் புறந்தள்ளிவிட்டு, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை முன்னிறுத்திச் செயற்பட்டமையும் இந்த வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாகும்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் உடனுக்குடன் மாற்றமடைவதற்கும் வாபஸ் பெறப்படுவதற்கும் அதுவே காரணமாகும். ஏனெனில் நாட்டில் நிர்வாக சேவையை செயற்திறனாக முன்னெடுப்பதற்கு போதியளவு அனுபவம் அவசியமாகும்.

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் மட்டுமீறிய அதிகாரங்கள், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் ஆகிவற்றைத் தம்வசம் கொண்டிருக்கும் அரசாங்கத்தினால் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்தக் குறைபாடுகளை அரசாங்கம் உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்.

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் மிகக் கோலாகலமான முறையில் நடாத்தப்பட்ட போதிலும், அது குறித்த மக்களின் ஆர்வம் பெருமளவிற்கு வீழ்ச்சி கண்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது. அதன் மூலமும் மக்கள் ஒரு செய்தியைக் கூறுகின்றார்கள் என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

அதேபோன்று தற்போது நிலவும் அந்நியச் செலாவணிப் பற்றாக்குறைக்கும் அரசாங்கத்தின் செயற்திறனற்ற நிர்வாகமே காரணமாகும். நாட்டில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள், நீண்ட கால நோக்கிலான திட்டங்கள் வகுக்கப்படாமை, வெளிநாட்டுச் சொத்து மோசடி என்பவற்றை வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் இதற்கான காரணங்களாக முன்வைக்கின்றனர்.

அடுத்ததாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து சர்வதேசத் தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது விரோதிகளைப் பழிவாங்குவதற்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டமையை நாம் அவதானித்திருக்கின்றோம்.

சுமார் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டும் அதேவேளை, உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் கையாளப்படுகின்ற, ஏற்றுக் கொள்ளத்தக்க திருத்தங்களை மேற்கொள்வது சிறந்ததாக அமையும் என்றும் கருதுகின்றோம். அதுமாத்திரமன்றி இது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் அவசியம் என்றும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment