ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கின்றோம் - சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கின்றோம் - சுமந்திரன்

(ஆர்.ராம்)

அதிகாரப்பகிர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்புக்கான தேவையை வலியுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கையில் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட முக்கிய பலவிடயங்களை சுட்டிக்காட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை முழுமையாக வரவேற்கின்றது என்று அதன் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் இலங்கை பற்றிய, ‘இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தினை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பிலான அறிக்கையின் முதற்பிரதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த அறிக்கை தொடர்பில் வீரகேசரியிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன் மேற்கண்டவாறுதெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்லெட் பச்லெட் அம்மையாரின் இலங்கை பற்றிய அறிக்கையின் முதற்பிரதி வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தில் எம்மால் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. விசேடமாக, இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்காக புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

அந்த வகையில் உயர்ஸ்தானிகரும் தனது அறிக்கையில், அதிகாரப்பகிர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவதானம் அவசியம் என்று குறிப்பிட்டிருக்கின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.

இதனைவிடவும், இறுதியாக நிறைவேற்றப்பட்ட 46/1தீர்மானத்திற்கு அமைவாக அரசாங்கம் எவ்விதமான முன்னேற்றகரமான விடயங்களையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை நாம் ஐ.நாவின் பல்வேறுபட்ட தரப்பினருக்கு கூறியிருந்ததோடு விசேடமாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திலும் சுட்டிக்காட்டியிருந்தோம். அந்த விடயமும் உயர்ஸ்தானிகரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்று கோரி நாம் நாடாளவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தினை முன்னெடுத்துக் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் அச்சட்டம் பற்றிய கரிசனையையும் உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதேநேரம், இழைகப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதை தவிர்த்து வருகின்றது. என்பதையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளதோடு அந்தக் கடப்பாட்டிலிருந்து விலகிச் செல்ல முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்தும் வகையில் உறுதியான முடிவுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்காத நிலையில், மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச உத்திகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளமை சிவில் நிருவாகத்தில் படையினரின் பிரசன்னம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நீதித்துறையில் காணப்படும் பின்னடைவுகள் உள்ளிட்ட விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு அண்மைக் காலங்களில் இலங்கையில் நிகழும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளையும் வெளிப்படுத்தி தனது விசனத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான சாட்சியங்களை பெற்றுக்கொள்ளும் பணிகள், அவற்றைப் பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் செயற்பாடுகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்க வேண்டியது அவசியமென வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment