(இராஜதுரை ஹஷான்)
யுத்தத்தினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை ரஷ்யாவும், உக்ரைனும் விளங்கிக் கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்குமிடையிலான முரண்பாட்டில் இலங்கை தலையிட முடியாது. நடுநிலைமை தன்மையில் செயற்படவே முடியும். உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த துருக்கியில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தின் ஊடாக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் (ஓய்வு) ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து இலங்கை அதிக கவனம் செலுத்தியுள்ளது. இராஜதந்திர மட்டத்தில் இவ்விடயம் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிற்கு எதிராக பலம்வாய்ந்த நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் நிலைமையில் இலங்கை இல்லை என்பதால் உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் நடுநிலைமை வகிக்கவே முடியும். அத்துடன் அவ்விரு நாடுகளுக்குமிடையிலான முரண்பாட்டில் எம்மால் தலையிட முடியாது. நடுநிலைமை வகிக்க முடியும்.
ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண யுத்தம் ஒரு வழிமுறையல்ல என்பதை இரு உக்ரைனும், ரஷ்யாவும் விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்விரு நாடுகளுக்குமிடையிலான முரண்பாட்டின் காரணமாக உலகில் ஏனைய நாடுகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவைத்துறை பாதிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் - ரஷ்யா மோதலினால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளன. இதன் தாக்கத்தை இலங்கையும் எதிர்கொள்ள நேரிடும் பலமிக்க நாடுகளுக்குமிடையிலான மோதல் உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த துருக்கியில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெலராஸ் நாட்டில் இலங்கை மாணவர்கள் உயர் கல்வியை தொடர்கிறார்கள். இம்மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெலராஸ் நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். பெலராஸ் நாட்டில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு அந்நாடு பொறுப்பேற்றுள்ளது என்றார்.
உக்ரைனில் நிலவும் அமைதியற்ற நிலைமையினை கருத்திற்கொண்டு அங்கு உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கிகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரேனில் உள்ள இலங்கையர்கள் இது தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள அவசர தொலைப்பேசி இலக்கமான 90 534 456 94 98 நிலையான தொலைபேசி இலக்கமான 90 312 427 10 32 மற்றும் மின்னஞ்சல் முகவரியான slemb.ankaraShmfa.gov.lk ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment