(எம்.மனோசித்ரா)
தான் வசிக்கும் வீட்டின் மின்சாரக் கட்டண பட்டியல் பிரிதொருவரின் பெயரில் வழங்கப்பட்டமையின் காரணமாகவே அதனை செலுத்தவில்லை என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண பட்டியலில் பெயரை மாற்றுமாறு பல சந்தர்ப்பங்களில் இலங்கை மின்சார சபைக்கு கோரிக்கை விடுத்த போதிலும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமையின் காரணமாகவே தான் மின் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், எனது வீட்டின் மின் கட்டண பட்டியல் தொடர்ந்தும் வேறு பெயர்களிலேயே வழங்கப்பட்டது. இது தொடர்பில் மின்சார சபைக்கு பல முறை அறிவித்ததோடு, பெயரை மாற்றுமாறும் கோரிக்கை விடுத்திருந்தேன். எவ்வாறிருப்பினும் இதுவரையில் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
மின் கட்டண பட்டியலில் பெயர் மாற்றப்படாமையின் காரணமாகவே நான் இதுவரையிலும் கட்டணத்தை செலுத்தவில்லை. எவ்வாறிருப்பினும் மின்சார சபைக்கு முழுமையான கட்டணத்தை செலுத்துவதற்கு தயாராகவுள்ளதோடு, என்னிடமுள்ள ஆவணங்களையும் எனது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பிக்கவுள்ளேன் என்றார்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது வீட்டுக்கான ஒரு கோடியே 20 இலட்சத்திற்கும் அதிக மின் கட்டணத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் செலுத்தவில்லை என்றும் , அதனை செலுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை மின்சாரசபை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment