சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும் : 4300 ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டோம் : புட்டினை இடைநீக்கம் செய்த ஜூடோ கூட்டமைப்பு : 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் ஜப்பான் : போருக்கு அமெரிக்காவே காரணம் என்கிறது வட கொரியா : பெலருஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் மறுப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும் : 4300 ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டோம் : புட்டினை இடைநீக்கம் செய்த ஜூடோ கூட்டமைப்பு : 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் ஜப்பான் : போருக்கு அமெரிக்காவே காரணம் என்கிறது வட கொரியா : பெலருஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் மறுப்பு

500 டொன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனா மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷியா மிரட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனில் நடத்தி வரும் பயங்கர தாக்குதலால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், ரஷியாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் தாக்குதலை நிறுத்தும்படி குரல் கொடுத்து வருகின்றன. இன்னும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், தனக்கு எதிராக செயல்படும் நாடுகளை ரஷியா மறைமுகமாக மிரட்டி வருகிறது. குறிப்பாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலைய செயல்பாடுகளில் பிரச்சினையை ஏற்படுத்தப்படும் என்றும் உலக நாடுகளை ரஷியா மிரட்டியுள்ளது.

இது குறித்து, ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் ஜெனரல் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 4 அமெரிக்கர்கள், 2 ரஷியர்கள், ஒரு ஜெர்மனியர் என 7 பேர் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் சில நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. மேலும், ரஷிய எஞ்சின்கள் மூலமாக விண்வெளி நிலையம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

அதனால் தனக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் விண்வெளி நிலை செயல்பாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தப்படும். இதனை பாதுகாக்கப்படவில்லை என்றால் 500 டொன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனா மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷியா மிரட்டியுள்ளது.
4300 ரஷிய வீரர்களை கொன்றுவிட்டோம்
உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவிய ரஷிய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

இன்று உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலைநகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.

இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4300 க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

4,300 உயிர் இறப்புகள், 27 விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள், 146 தொட்டிகள், 706 கவச போர் வாகனங்கள், 49 பீரங்கிகள், 1 பக் வான் பாதுகாப்பு அமைப்பு, 4 கிரேட் மல்டிபிள் ராக்கெட் ஏவுதள அமைப்புகள் (Grad multiple rocket launch systems 30 வாகனங்கள், 60 டேங்கர்கள், 2 ட்ரோன்கள், 2 படகுகள். இதுதவிர ரஷிய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

இதேபோல் ரஷிய பாதுகாப்புத்துறை கூறியிருக்கும் தகவலில், 223 பீரங்கிகள் மற்றும் ராணுவ வாகனங்கள், 28 போர் விமானங்கள், 39 ரொக்கெட் லாஞ்சர்கள், 86 சிறிய ரக பீரங்கி மற்றும் மோர்ட்டார்கள், 143 சிறப்பு ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாக கூறி உள்ளது.
புட்டினை இடைநீக்கம் செய்த ஜூடோ கூட்டமைப்பு 
ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌரவத் தவைவர் மற்றும் தூதுவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

உக்ரேன் படையெடுப்பால் அறிவிக்கப்பட்ட பல விளையாட்டு "தடைகளில்" இதுவும் ஒன்று.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் புட்டின் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌவரத் தலைவராக இருந்து வந்தார். 2014ஆம் ஆண்டு ஜூடோ விளையாட்டின் மிக உயர்ந்த நிலையான எட்டாவது டான் விருதையும் புதின் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெறவிருந்த ரஷ்யாவின் ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் ( Russia's Formula 1 Grand Prix ) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதே பாேல ரஷ்யாவில் உள்ள எஸ்டி பீட்டர்ஸ்பர்க்கில் 2022 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி (2022 Champions League final ) திட்டமிடப்பட்டிருந்தது. ரஷ்யா உக்ரேன் மீது எடுத்த படையெடுப்பால் அது பாரிஸ்க்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் நிதியுதவி
உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நிதியுதவியும் வழங்கி வருகிறது. அந்த வகையில், ஜப்பான் உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு நிதி அளிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இதேபோல், ஜப்பான் கோட்டீஸ்வரரான ஹிரோஷி மிகிதானி என்பவர் உக்ரைனுக்கு 8.7 மில்லியன் டொலர் நன்கொடையாக அளித்துள்ளார்.

இது குறித்து ஹிரோஷி உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், உக்ரைனில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனிதாபிமானம் அடிப்படையில் 8.7 மில்லியன் டொலர் நன்கொடையாக வழங்குகிறேன்.

ரஷ்யாவும் உக்ரைனும் இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்றும், உக்ரைன் மக்கள் கூடிய விரைவில் மீண்டும் அமைதி பெற முடியும் என்றும் நம்புகிறேன்.

எனது எண்ணங்கள் உங்களுடனும் உக்ரைன் மக்களுடனும் எப்போதும் இருக்கும். நியாயமற்ற சக்தியால் உக்ரைனை மிதிப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவால் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
உக்ரைன் போருக்கு அமெரிக்காவே மூல காரணம்
அமைதியை நிலைநிறுத்த முயற்சிப்பதாக கூறி, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக வட கொரியா குற்றம் சாட்டி உள்ளது.

போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை இப்போது இல்லை. இரு நாடுகளும் அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷியா - உக்ரைன் போர் தொடர்பாக வட கொரியா முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தனது கருத்தை வெளியிட்டுள்ளது. அதில், ரஷியா தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவே மூல காரணம் என்று வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து வட கொரியா வெளியுறவு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வட கொரிய ஆராய்ச்சியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்கா, ரஷியாவின் பாதுகாப்பிற்கான நியாயமான கோரிக்கையை புறக்கணித்து ராணுவ மேலாதிக்கத்தை பின்பற்றுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவே மூல காரணம்.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா இரண்டு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அமைதியை நிலைநிறுத்த முயற்சிப்பதாக கூறி, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது.

அது மட்டுமின்றி மற்ற நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளை எந்த காரணமும் இல்லாமல் கண்டிக்கிறது. அமெரிக்கா உலகத்தை ஆட்சி செய்த காலம் போய்விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெலருஸில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் மறுப்பு
பெலருஸில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்புகளை உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார்.

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பெலருஸ் ஒரு களமாக இருப்பதாக சுட்டிக்காட்டியே இந்த பேச்சுவார்த்தையை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார். எவ்வாறாயினும் அவர் ஏனைய இடங்களில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பத்தில் தயக்கமில்லை என்று கூறியுள்ளார்.

பெலருஸ்ய நகரான கோமலில் உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன்வந்தது.

உக்ரேனிய நெருக்கடி தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பெலருஸுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்ப புடின் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா முன்னதாக கூறினார்.

எனினும் உக்ரேன் மீது தாக்குதல் நடத்த பெலருஸ் பயன்படுத்தப்படுவதால்அங்கு வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும் வேறு இடத்தில பேச்சு வார்த்தைக்கு தயார் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment