கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதால் என்ன பயனை காணப்போகின்றோம் : விளக்கமளிக்கிறார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 15, 2022

கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதால் என்ன பயனை காணப்போகின்றோம் : விளக்கமளிக்கிறார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர்

கொவிட் தொற்றினால் ஏற்படக்கூடிய மரணங்களை குறைத்துக் கொள்வதற்கு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது மிகச் சிறந்தது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் விசேட வைத்திய நிபுணருமான நீலிகா மல்லவிகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் (13) பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் அவசியம் குறித்து மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தொற்றினால் அதிகமாக பாதிக்க கூடியவர்களாக முதியவர்கள் காணப்படுகின்றார்கள். பொதுவாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட கால நோய்களை கொண்டவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதுடன், மரணங்களையும் சந்திக்கின்றனர்.

இலங்கையில் கொவிட் டெல்டா வகை திரிபினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது ஒமிக்ரோன் திரிபு நாட்டில் மிகவும் வேகமாக பரவும் நிலை காணப்படுகின்றது.

டெல்டா வகை வைரஸ் திரிபுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரோன் வைரஸ் திரிபு ஊடாக பாதிப்புக்கள் மற்றும் மரண வீதம் என்பன குறைவாக காணப்படுகின்ற போதிலும், இந்த ஒமிக்ரோன் வைரஸானது டெல்டா வகை திரிபை விட மிக வேகமாக பரவக்கூடியது.

அமெரிக்காவில் நாளொன்றிற்கு ஒரு பில்லியன் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படுகின்றது. அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. அத்துடன் நாளொன்றுக்கு சுமார் 1500 - 2000 பேர் வைரஸ் தொற்றினால் இறக்கின்றனர்.

அதேபோன்று பிரித்தானியாவிலும் வைரஸ் தொற்றினால் நாளொன்றுக்கு சுமார் 300 பேர் மரணிக்கின்றனர். அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது.

அந்த நாடுகளில் தடுப்பூசி திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்ட போதிலும், அதிகளவிலான நோயாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகின்றன. இதனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் ஊடாக என்ன பயன் காணப்போகின்றோம் என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். 

இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவில் 12.5 வீதமானோர் அதாவது 85 மில்லியன் மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசியைக் கூட பெற்றுக் கொள்ளாதவர்களாகக் காணப்படுகின்றனர். இதனால் அங்கு நோய்த் தொற்று மிக விரைவாக பரவுகின்றது. வைத்தியசாலைகளில் அனுமதிக்க கூடிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. 

ஐரோப்பியா மற்றும் அனேகமான நாடுகளிலும் இந்த நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் தடுப்பூசியை எதிர்க்கின்றனர். அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இலங்கை அதைவிட முன்னிலையில் இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கொவிட் தொற்று ஏற்பட்டால் மிக விரைவில் மரணத்தை சந்திக்க கூடியவர்களாக முதியோர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்கள் காணப்படுகின்றனர். 

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொள்வதன் ஊடாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்க கூடியவர்களின் எண்ணிக்கையை 50% மாக குறைத்துக் கொள்ள முடியும். 

ஆனால் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வதனால் பாதிக்கப்படுவோர் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை 90 சத வீதத்தால் குறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்கள் வதந்திகளை நம்பி அச்சம் கொள்ளாது, தம் உடல் நலத்திற்காக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது என்றும், அதன் ஊடாக நாட்டின் நாளாந்த நடவடிக்கைகளை எவ்வித தடையுமின்றி முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் விசேட வைத்திய நிபுணருமான நீலிகா மல்லவிகே மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment