கொவிட் தடுப்பூசியினால் பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு இல்லை : மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை - விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம - News View

About Us

About Us

Breaking

Friday, January 14, 2022

கொவிட் தடுப்பூசியினால் பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு இல்லை : மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை - விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம

கொவிட் தடுப்பூசியினால் பாலியல் பிரச்சினைகள் மற்றும் மலட்டுத்தன்மை என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று உலக நாடுகள் கொவிட் நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளன. இலங்கையிலும் தற்போது மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதனால் அதன் பின் விளைவாக, பாலியல் பிரச்சினைகள், மலட்டுத்தன்மை மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக வதந்திகளும் இடம்பெற்று வருகின்றன. 

மக்கள் மத்தியில் அச்சமும் இடம்பெறுகின்றன. மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. கொவிட் தடுப்பூசியினால் இவ்வாறான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதற்கான எவ்வித தகவல்களும் இதுவரையிலும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன் அவ்வாறான முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கவில்லை.

ஆனால். கொவிட் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு பிற்காலத்தில் நோய் பின் விளைவு காரணமாக இந்த குறைபாடுகள், அதாவது பாலியல் பிரச்சினைகள் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, வதந்திகளை நம்பாது தமது ஆரோக்கியத்திற்காக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டு இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பு பெறுமாறும் விசேட வைத்திய நிபுணர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment