சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள இம்முறை பொதுமக்களுக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கப்படவில்லை - இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள இம்முறை பொதுமக்களுக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கப்படவில்லை - இராணுவத் தளபதி

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு 74ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள இம்முறை பொதுமக்களுக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கப்படவில்லை. சுதந்திரதின அணிவகுப்புக்கள் முழுமையாக நேரலையில் ஒளிப்பரப்பாகும் என இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 74 ஆவது தேசிய சுதந்திர நிகழ்வினை சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி கௌரவமான முறையில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன.

தேசிய சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 4ஆம் திகதி காலை 8.13 மணியளவில் சுதந்திர சதுக்க வளாகத்திற்கு வருகை தருவார்.

ஜனாதிபதியின் வருகையினை தொடர்ந்து பாடசாலை மாணவர்களினால் வரவேற்று கீதம் இசைக்கப்படுவதுடன் ஜனாதிபதிக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம்பெறும்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்படும். அதனை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உரையாற்றுவார்.

விசேட மரியாதை அணிவகுப்பு இரண்டு கட்டமாக இடம்பெறும். இராணுவத்தினரும், பொலிஸாரும் ஒன்றினைந்து ஒரு கட்ட மரியாதை அணிவகுப்பில் ஈடுப்படுவதுடன், சிவில் பாதுகாப்பு தரப்பினரும், தேசிய மாணவர் படையினர் ஒன்றினைந்து பிறிதொரு கட்டத்தில் மரியாதை அணிவகுப்பில் ஈடுபடுவார்கள்.

அதனைத் தொடர்ந்து 111 வாகனங்கள் ஊடாக விசேட மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு இம்முறை பல்வேறு விடயங்களில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதார உயிரியல் குமிழி முறைமையில் மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு இம்முறை பொதுமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு பிரத்தியேக இடம் ஒதுக்கப்படவில்லை. சுதந்திர தின நிகழ்வுகள் முழுமையாக நேரலை ஊடாக ஒளிப்பரப்பாகும் என்றார்.

No comments:

Post a Comment