இலங்கையில் பாராளுமன்ற மனித உரிமைகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்படாமைக்கான காரணம் என்னவென்று சஞ்ஜா டி சில்வா ஜயதிலக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
கலாநிதி.தயான் ஜயதிலக்கவின் பாரியாரும் அரசியல் விமர்சகருமான சஞ்ஜா டி சில்வா ஜயதிலக்க, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் மற்றும் இலங்கையின் பொறுப்புக் கூறல் செயற்றிட்டம் தொடர்பில் தனது கருத்துக்களை வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு நடைபெற்ற 46.1ஆவது ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் பொறுப்புக் கூறல் செயற்றிட்டமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்றிட்டத்திட்டமானது முழுக்க முழுக்க புதியதொரு பொறிமுறையைக் கொண்டதாக அமைந்துள்ளது. அச்செயற்றிட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகமானது, ஆதாரங்கள் மற்றும் உறுதிப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட விடயங்களை சேகரிக்கின்றது.
அத்துடன் பொறுப்புக் கூறலை நடைமுறைச் சாத்தியமாக்கக் கூடிய வகையிலான மூலோபயங்கள் பற்றி கண்டறிவதையும் இலக்காக கொண்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட, மற்றும் உயிர்பிழைத்தவர்களுக்காக வாதிடல், நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான உரிய தகுதியான நாடுகளை, தரப்புக்களை நாடுதல், ஒத்துழைப்புக்களைப் பெறல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதனைவிடவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்து மூலமான அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் கட்டமைப்பின் ஏனைய அமைப்புக்களும் 2009 இல் நடைபெற்ற பாரிய குற்றங்கள் தொர்பான ஆதரங்களையும் சேகரித்து வருகின்றன.
அதுமட்டுமன்றி, பூகோள கால ஆய்வுக்காக மனித உரிமைகள் பற்றிய தேசிய அறிக்கையை அளிக்க வேண்டியுள்ளது. இவ்விதமான மிக முக்கியமான விடயங்கள் காணப்படுகின்றபோது இலங்கை அதுபற்றிய கரிசனைகளைக் கொண்டதாக இல்லை.
மாறாக, ஏனைய நாடுகளில் மனித உரிமைகள், பொறுப்புக் கூறல் விடயங்கள் உள்ளிட்ட மேம்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றத்தில் மனித உரிமைகள் பற்றிய பாராளுமன்றக் குழுவொன்று காணப்படுகின்றது.
இக்குழுவானது சர்வதேச மனித உரிமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தல், பாராளுமன்றத்திற்கு மனித உரிமைகள் சார்ந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. ஆனால் இலங்கையில் இவ்விதமான குழுவொன்று இதுவரையில் ஸ்தாபிக்கப்படவில்லை. அதற்கான காரணமும் வெளிப்படுத்தப்படவில்லை என்றார்.
கேசரி
No comments:
Post a Comment