உண்மைகளை மறைக்க சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன : ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் குறுகிய நோக்கங்கள் மறைந்துள்ளன - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் - News View

About Us

About Us

Breaking

Friday, January 14, 2022

உண்மைகளை மறைக்க சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன : ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் குறுகிய நோக்கங்கள் மறைந்துள்ளன - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்குப் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அந்த தகவல்கள் தற்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட பேராயர், எவர் அவற்றை மறைக்க முற்பட்டாலும் அதை அவர்களால் செய்ய முடியாது. ஏனென்றால் கடவுளின் நீதி ஒன்று உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், முஸ்லிம் அடிப்படைவாதிகளை குற்றவாளிகளாக காட்டி விட்டு பொறுப்பிலிருந்து எவரும் தப்பித்து விட முடியாது அதன் பின்னணியில் செயற்பட்ட சூத்திரதாரிகளை வெளிக் கொணர்ந்து அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பேராயர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று 1000 தினங்கள் நிறைவடையும் நிலையில் நேற்றையதினம் தேவத்தையிலுள்ள இலங்கை மாதா பெசிலிக்கா பேராலயத்தில் விசேஷ மத வழிபாட்டு நிகழ்வொன்று நடைபெற்றது.

கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் நாட்டின் அனைத்து மறை மாவட்டங்களையும் சேர்ந்த ஆயர்கள், குருக்கள் அருட் சகோதரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த மத வழிபாட்டு நிகழ்வில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் மரணமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். 

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தமது மறையுரையில் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று ஆயிரம் தினங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் பொறுமையுடன் நீதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த தாக்குதல்களின் பின்னணியில் குறுகிய நோக்கங்கள் மறைந்துள்ளன. அவை வெளிப்படுத்தப்பட வேண்டும். அது தொடர்பில் தனியான விசாரணை நடத்த வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ள போதும் அந்த தாக்குதலையே மக்கள் மத்தியிலிருந்து மறக்கடிப்பதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

யாருடைய தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக மேற்படி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படவில்லை என நாம் கேட்க விரும்புகின்றோம். உண்மை மறைக்கப்பட்டு பொய்கள் விதைக்கப்படுகிறது. பொய் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. உண்மைகள் விரைவில் வெளிவரும் என்பது உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மட்டுமல்ல கடந்த 73 வருடங்களாக நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தத்தினால் அநீதி இழைக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்ட மக்கள் அநாதரவாக்கப்பட்ட மக்கள் என அனைத்துக்கும் பதில் கூறியே ஆக வேண்டும். 

பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் கடவுளின் செவிகளை எட்டியுள்ளன. அவரே அவற்றிற்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மைகளை இல்லாதொழிக்க முயன்றாலும் அது தொடர்பான மக்களின் பலம் அதிகரித்து வருகிறது. எனினும் ஆட்சியாளர்கள் தினம் தினம் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. உண்மைகள் காற்றடைக்கப்பட்ட பந்துகளை போன்றது. அது மீண்டு வெளியே வரும். 

அடிப்படைவாத கும்பல் ஒன்றினால் மேற்படி தாக்குதல் நடத்தப்படுவது தெரிந்திருந்தும் அதற்கு இடமளித்தல், மறுபக்கம் அதனை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமை அதனை தடுப்பதற்கு முயற்சித்தவர்களை தடுத்தமை போன்ற செயற்பாடுகளை பார்க்கும்போது சில தலைவர்களுக்கு அரசியல் இலாபம் பெறுவதற்காக இந்த தாக்குதலை உபயோகித்துக் கொள்ள வேண்டியிருந்தது என்று தோன்றுகிறது.

எமது நாடு பயணித்துக் கொண்டிருக்கும் மோசமான நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று மக்கள் கடவுளிடம் மன்றாட வேண்டும்.

அரசியல் நோக்கங்களுக்காக மக்களை பிளவுபடுத்த அரசியல்வாதிகள் முற்பட்டாலும் கடவுள் அதற்கு இடமளிக்க மாட்டார். மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டு நீதியை பெற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment