ஜனாதிபதியின் கொள்கைத் திட்டம் வெற்றி பெற அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராகவுள்ளேன் : தவறான ஆலோசனைகளுக்கு கவனம் செலுத்தியதாலேயே செயலாளர்கள் பதவி விலகினர் - மஹிந்தானந்த அளுத்கமகே - News View

About Us

About Us

Breaking

Saturday, January 1, 2022

ஜனாதிபதியின் கொள்கைத் திட்டம் வெற்றி பெற அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராகவுள்ளேன் : தவறான ஆலோசனைகளுக்கு கவனம் செலுத்தியதாலேயே செயலாளர்கள் பதவி விலகினர் - மஹிந்தானந்த அளுத்கமகே

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைபேறான விவசாய கொள்கைத் திட்டத்தை வெற்றி பெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராகவுள்ளேன். விவசாயத்துறை அமைச்சின் செயற்பாடுகள் இவ்வருடம் முழுவதும் துரிதப்படுத்தப்பட்ட வகையில் முன்னெடுக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

விவசாயத்துறை அமைச்சின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், விவசாயத்துறை அமைச்சில் திறமையான சிறந்த அதிகாரிகள் பலர் உள்ளனர். இருப்பினும் அவர்களை பலவீனப்படுத்தும் தரப்பினரும் உள்ளார்கள். தவறான ஆலோசனைகளுக்கு கவனம் செலுத்திய காரணத்தினால்தான் விவசாயத்துறை அமைச்சில் செயலாளர்கள் கடந்த காலங்களில் பதவி விலகினார்கள்.

விவசாயத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க திறமையானவர். அரசாங்கத்தின் நிலைபேறான இலக்கினை செயற்படுத்தும் நோக்கில் அவர் கடமைகளில் ஈடுபட்டார். வெளித் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ஆலோசனைகளினால் அவரால் நிலைபேறான விவசாயக் கொள்கைத் திட்டத்தை செயற்படுத்த முடியவில்லை. இவ்வாறானவர்கள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

விவசாயத்துறை அமைச்சின் திட்டங்களை ஒழுங்குப்படுத்தும் பொறுப்பினை விவசாயத்துறை அமைச்சின் புதிய செயலாளர் பொறுப்பேற்க வேண்டும். செயலாளர் விவசாயத்துறை அமைச்சின் திட்டங்களை செயற்படுத்தி, அதன் முன்னேற்றத்தை ஒவ்வொரு மாதமும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம்.

அரச அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும். விவசாயத்துறை அமைச்சு குறித்து முழு நாடும் அவதானம் செலுத்தியுள்ளது.

நிலைபேறான விவசாயக் கொள்கை சிறந்த திட்டம் என்ற காரணத்தினால் அதற்கு பல சவால்கள் தோற்றம் பெற்றுள்ளன. ஜனாதிபதியின் தூரநோக்குத் திட்டத்தை செயற்படுத்தவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். நாட்டுக்கும், நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் திட்டத்தை வெற்றி பெற செய்ய எச்சவால்களையும் எதிர்க்கொள்ளத் தயார் என்றார்.

No comments:

Post a Comment