(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுத்தால் அதனை சட்டத்தின் ஊடாக எதிர்கொள்வேன். அரச வரப்பிரசாதங்களுக்காக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை குறித்து கருத்துரைக்காமல் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைப்பதற்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு தடையல்ல. முக்கிய அமைச்சுப் பதவிகளை வகிக்கும் போதும் மக்கள் தரப்பில் இருந்துகொண்டு கருத்துரைத்துள்ளோம்.
மக்கள் மத்தியில் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக எழும் விமர்சனங்கள் குறித்து அரச தலைவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த கால ஆட்சியாளர்கள் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியதிகாரத்தை முன்னெடுத்து சென்றார்கள். விமர்சனங்கள் அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் ஒரு கருவியாக காணப்படுகிறது.
அரச புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்கு அமைய இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டேன் என பொதுஜன பெரமுனவின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ள கருத்து பாரதூரமானது.
அரசியல் அனுபவம், அரச நிர்வாகம் தொடர்பில் தெளிவில்லாத அந்த பாராளுமன்ற உறுப்பினரது பெயரைக்கூட குறிப்பிட விரும்பவில்லை.
அரச புலனாய்வுப் பிரிவின் அறிக்கை எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்தது என்பது குறித்து புலனாய்வுப் பிரதானி கவனம் செலுத்த வேண்டும்.
அரச புலனாய்வுப் பிரிவினர் என்னை கண்காணிக்க வேண்டிய தேவை கிடையாது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினை குறித்து புலனாய்வுப் பிரிவினர் அரச தலைவருக்கு அறிக்கை சமர்ப்பித்தால் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுத்தால் அதனை சட்டத்தின் ஊடாக எதிர்கொள்ள தயாராகவுள்ளேன். அரச வரப்பிரசாதங்களுக்காக நாட்டு மக்களின் பிரச்சினை குறித்து கருத்துரைக்காமல் இருக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment