மின்சார சபை தனித்து செயற்பட வேண்டும் : 91 பில்லியன் ரூபா கடன் தர வேண்டியுள்ளது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 8, 2022

மின்சார சபை தனித்து செயற்பட வேண்டும் : 91 பில்லியன் ரூபா கடன் தர வேண்டியுள்ளது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியதால் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளமை நிராகரிக்கத்தக்கது. நிதி நெருக்கடியினை முகாமைத்துவம் செய்துகொள்ள மின்சார சபை எதிர்வரும் காலங்களில் தனித்து செயற்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இறக்குமதி செய்யப்படும் உராய்வு எண்ணெயை நட்டத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் மின்சார சபைக்கு விநியோகிக்கிறோம் என்பதை கடந்த செப்டெம்பர் மாதம் முதல் மின்சார சபைக்கு அறிவித்து வருகிறோம். கடந்த செம்டெம்பர் மற்றும் ஒக்டோபர் காலப்பகுதிகளில் உராய்வு எண்ணெய் ஒரு லீற்றர் 125 தொடக்கம் 135 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டது.

இருப்பினும் 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய 70 ரூபா அடிப்படையில் உராய்வு எண்ணெயை இலங்கை மின்சார சபைக்கு விநியோகித்தோம். விலை அதிகரிப்பிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அது வெற்றி பெறவில்லை.

இலங்கை மின்சார சபைக்கு தேவையான உராய்வு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட வேண்டுமாயின் அதற்கான டொலர் திரட்டிக் கொடுக்குமாறு மின்சார சபைக்கும், மின்சாரத்துறை அமைச்சிக்கும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தோம்.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தமக்கு உராய்வு எண்ணெய் அவசியமற்றது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு இலங்கை மின்சார சபை கருத்துக்களை முன்வைத்தது.

கடந்த மாதம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கை மின்சார சபை எதிர்வரும் மாதம் முதல் உராய்வு எண்ணெய் அவசியம் என்பதை வெளிப்படுத்தியது.

நாட்டுக்கு தேவையான எரிபொருள் இறக்குமதியின் போது பல ஒழுங்குப்படுத்தல்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. உராய்வு எண்ணெயை பெற்றுக் கொள்ள இலங்கை மின்சார சபை உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை.

அவசர நிலை எழுந்துள்ள போது பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு 10 ஆயிரம் மெற்றிக் தொன் உராய்வு எண்ணெயை நேற்று விநியோகித்தது.

இலங்கை மின்சார சபை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 91 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது. நிதி நெருக்கடியினை சீர் செய்துகொள்ள மின்சாரத்துறை அமைச்சு எதிர்வரும் நாட்களில் தனித்து செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment