(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் உயர் நீதிமன்ற நீதியரசராக சுயாதீனமாக செயற்பட்டேன். ஜனாதிபதி பதவி வகித்துக் கொண்டு அவர் நீதித்துறைக்கு வழங்கிய உயர் அந்தஸ்த்து நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாத்தது. 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பாரிய தாக்குதலுக்கு உள்ளானது என முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்கவின் ஜனாதிபதி பதவிக் காலத்தை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் நான் மதிக்கக்கூடிய மிகவும் சொற்பளவிலான நபர்களில் முக்கியமானவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறப்பிடம் பெறுகிறார்.
நான் 3 தசாப்த காலமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பீடத்தில் சேவையாற்றிய காலத்திலும், உயர் நீதிமன்றில் சேவையாற்றிய காலத்திலும் அவரை நான் பெருமளவில் சந்தித்ததில்லை. சேவையினை அடிப்படையாகக் கொண்ட பொது நிகழ்வுகளிலும், பதவிப் பிரமாணங்களின் போதும் சந்தித்துள்ளேன்.
அதேபோல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலகட்டத்தில் இராஜதந்திர விவகாரங்கள் கையாண்ட விதம் இந்த அழைப்பினை ஏற்றுக் கொள்வதற்கும் ஒரு காரணியாக அமைந்தது.
1993 ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உயர் நீதிமன்ற நீதியரசராக சுயாதீனமாக செயற்பட்டேன். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு அவர் நீதித்துறைக்கு உயர்மட்ட நிலையினை வழங்கினார். நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க அவர் வழங்கிய ஒத்துழைப்பு அதனூடாக உறுதிப்படுத்தப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாரிய தாக்குதல் ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பல்வேறு செயற்திட்டங்கள் அக்காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன. நாட்டின் சட்டம், கல்வி, பொருளாதார அபிவிருத்திக் கொள்கைள் அனைத்தும் காலப்போக்கில் மாற்றியமைக்கப்பட்டன என்றார்.
No comments:
Post a Comment