ஒமிக்ரோன் திரிபுக்கு எதிராக செயற்படுவதில் தற்போதுள்ள கொவிட்-19 தடுப்பூசிகள் நெருக்கடியை சந்தித்திருப்பதாகவும் செயல்திறன் கொண்ட புதிய தடுப்பூசியை பெற மாதங்கள் எடுத்துக் கொள்ளக் கூடும் என்றும் அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனமான மொடர்னாவின் தலைவர் ஸ்டீபன் பேன்சல் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் திரிபுக்கு எதிராக தற்போதிருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறன் தரவு அடுத்த இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்றபோதும் விஞ்ஞானிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
“இது நன்றாக இருக்காது, என்றே நான் பேசிய அனைத்து விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஒமிக்ரோன் திரிபில் அச்சுறுத்தல் மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.
ஒமிக்ரோன் பிறழ்வில் காணப்படும் 50 பிறழ்வுகளில் 32 ஸ்பைக் புரதத்தில் இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் கவலைப்படுவதாக ஸ்டீபன் பேன்சல் கூறினார்.
இது கொவிட்டுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் பயன்படுத்தும் வைரஸின் ஒரு பகுதியாகும்.
ஒமிக்ரோன் திரிபுக்கு எதிரான தடுப்பூசிக்கு பணிகளை ஆரம்பித்திருப்பதாக பைசஸ் மற்றும் மொடர்னா நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் கவலையளிப்பதாக இருந்தாலும், அதை கண்டு அஞ்ச தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
புதிய வைரஸ் குறித்து வெள்ளை மாளிகையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது இதனை அவர் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ‘ஒமிக்ரோன்’ வைரஸ் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படுவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது. இது ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம் என்றபோதிலும், அதை கண்டு நாம் அஞ்சத் தேவயைில்லை.
ஏனெனில் இந்த புதிய மாறுப்பாட்டை எதிர்த்து போராட நாம் தயாராக உள்ளோம். இந்த போரில் முன்பு இருந்ததை விட தற்போது நம்மிடம் அதிக கருவிகள் உள்ளன. எனவே ‘ஒமிக்ரோன்’ வைரஸ் காரணமாக ஊரடங்கை அமுல்படுத்தவோ, பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்கவோ அவசியமில்லை. மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு, முகக்கவசம் அணிந்தால் போதுமானது.
நம்மிடம் தற்போதுள்ள தடுப்பூசிகள் புதிய வைரசுக்கு எதிராக செயல்படும் என சுகாதார நிபுணர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதேபோல் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வது பாதுகாப்பை அதிகரிக்கும். இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.
முன்னதாக ‘ஒமிக்ரோன்’ வைரஸ் காரணமாக தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அமெரிக்கா நேற்று முன்தினம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment