இலங்கை இராணுவக் கல்வியியற் கல்லூரியின் கெடெட் அதிகாரிகளது 96ஆவது விடுகை அணிவகுப்பில் இன்று கலந்துகொண்டு உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள கெடெட் உத்தியோகத்தர்களை நான் வாழ்த்துவதுடன், கல்லூரியின் கட்டளை அதிகாரி மற்றும் பணிக்குழாமினர், அணிவகுப்புக் கட்டளை அதிகாரி, ஆசிரிய சார்ஜென்ட் மேஜர், பயிற்றுனர்கள் மற்றும் கெடெட் அதிகாரிகளினால் வெளிக்காட்டப்பட்ட உயர்தரத் திறமைகளைப் பாராட்டுகிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில் 19.12.2021 அன்று முற்பகல் இடம்பெற்ற 96ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்துரைத்த ஜனாதிபதி, மாலைதீவு குடியரசு, ருவண்டா குடியரசு மற்றும் சாம்பியா குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு கெடெட் அதிகாரிகளும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற இலங்கை மாணவர் படை அதிகாரிகள் ஐவரும், இன்று இந்த அணிவகுப்பில் கலந்துகொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு நாட்டின் இராணுவத்தில் அதிகாரம் உள்ள அதிகாரியாக இணைவது எந்தவோர் இளைஞனும் பெற்றுக் கொள்ளும் ஒரு பெரிய கௌரவமாகும். இவ்வாறான தேசபற்றுள்ள இளைஞர்களை வளர்த்தல் பற்றி கெடெட் அதிகாரிகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் வாழ்க்கையில் இந்த முக்கியமான மைல் கல்லை அடைந்து கொண்டதற்காக நீங்கள் மிகவும் பெருமைப்படுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். எதிர்காலத்தில் அவர்கள் இராணுவப் படைகளில் தொழில் திறமையைக் காட்டி உங்களை மேலும் பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
இலங்கையின் 7ஆவது ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகவும் தளபதியாகவும் உங்கள் முன் நிற்கின்றேன். இருப்பினும், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளம் கெடெட் அதிகாரியாக, இராணுவத்தில் 4ஆவது ஆட்சேர்ப்பு படையின் அங்கிகாரத்துக்கான அணிவகுப்பில் இன்று நீங்கள் அனைவரும் நிற்கும் இடத்தில் நானும் அன்று நின்றேன்.
எனது இராணுவ வாழ்க்கை முழுவதிலும் நான் பெற்ற பயிற்சிகள், அனுபவங்கள் மற்றும் என்னுள் உருவாக்கப்பட்ட பல குணாதிசயங்கள் இந்த நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு என்னைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்றியமையாத காரணிகளாக இருந்தன என்பதை தயக்கமின்றி கூற விரும்புகிறேன்.
எனவே, எனது தொழில் வாழ்க்கையின் மூலம் நான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் சில முக்கியமான கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்கு ஒரு நல்ல நிலைப்பாடாக இருக்கும்.
ஒர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று மிக உயர்ந்த ஒழுக்கநெறி என்பதை உங்கள் பயிற்சியின் போது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நீங்கள் இந்த நிறுவனத்தில் நுழைந்த முதல் நாளிலிருந்து, உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ள உடல் பயிற்சிகள் மற்றும் பயிற்சிகளுக்கு கூடுதலா நீங்கள் தினமும் காலையில் எழும்புதல், உங்கள் படுக்கையை சீர் செய்தல், உங்கள் ஆடைகளை அயர்ன் (Iron) செய்யவும், உங்கள் காலணிகள் பொலிஷ் (Polish) செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவும். உங்களின் ஆடைகள் மற்றும் தோற்றம் போன்ற அனைத்து அம்சங்களும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருப்பதை உறுதி செய்தல் உங்கள் பயிற்சியின் முக்கிய அங்கமாகும்.
இதற்கு ஒரு காரணம் உண்டு. இந்த சாதாரணமான வேலைகளில் நீங்கள் செலுத்தும் கவனம் ஒழுக்க நெறியை உருவாக்குவதற்கு காரணமாகிறது. இது ஒரு விடயத்தைப் பற்றி உங்களுக்கு விரிவாக கவனம் செலுத்த உதவுவதோடு, உங்கள் நாளைத் தொடங்கும் போது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் உங்களுக்கு வெற்றி உணர்வை அளிக்கிறது. உங்களின் தொழில் உங்களை எந்த பாதையில் கொண்டு சென்றாலும், இவை அனைத்தும் பிற்கால வாழ்க்கையில் உங்களுக்கு உதவும் அத்தியாவசிய குணங்களாக செயற்படும்.
நிறைவேற்று அதிகாரியின் மூலம் ஒவ்வொரு நாளும் PRI (ரெஜிமென்ட் நிறுவனத்தின் தலைவர் கணக்கு) அறக்கட்டளையின் வரவு செலவு அறிக்கைகளை கவனமாக சமப்படுத்தும் முறையை சமிக்ஞை படையணியின் ஓர் இளம் அதிகாரியாக நான் அவதானித்தேன். நிறைவேற்று அதிகாரி ஒரு சிறிய தொகையைக் கூட பலமுறை எண்ணி, அன்றைய வேலையை முடிப்பதற்கு முன் அதனை வைக்கும் பாதுகாப்புப் பெட்டகம் பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்வார்.
இராணுவ வாழ்க்கைக்கு ஒழுக்கமும் நேர்மையும் மிகவும் முக்கியம் என்பதால் அவர் இந்த எளிய பணியில் அதிக கவனம் செலுத்தினார். இளம் அதிகாரியாக இருந்த எனக்கு இது மிகவும் பெறுமதிமிக்க பாடமாக இருந்தது.
நீங்கள் கல்லூரியில் இருந்த காலத்தில், நீங்கள் ஈடுபட்ட பல்வேறு பயிற்சிகள் ஏனைய கெடெட் அதிகாரிகளுடன் சேர்ந்து நடந்தன. ஏனையோருடன் சேர்ந்து சிறப்பாக ஒன்றிணைந்து வேலை செய்யும் இந்தத் திறனை வளர்ப்பது இராணுவத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.
ஒரு நபராக நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் சரி, ஏனையவர்களின் ஒத்துழைப்பின்றி உங்களால் வெற்றி பெற முடியாத சூழ்நிலைகளை நீங்கள் சந்திப்பீர்கள்.
எனவே, குழு மனப்பான்மையுடன் பணியாற்றுவது இன்றியமையாத வாழ்க்கைத் திறனாக இருப்பதோடு அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இராணுவத்தில் உங்களது தொழில் வாழ்க்கையில் அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு நிறைய கிடைக்கும்.
குறிப்பாக உத்தியோகத்தர்களாகிய நீங்கள், உங்கள் தலைமைத்துவத் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நீங்கள் விரைவில் ஒரு பிரிவுக்கு நியமிக்கப்பட்டால், உங்களுக்குக் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளையும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும். உங்கள் பதவிகளை உயர்த்தும்போது, உங்கள் பொறுப்புகளும் படிப்படியாக அதிகரிக்கும்.
என்றாவது ஒருநாள் உங்களில் ஒருவர் இராணுவத் தளபதியாக இருக்கும் நிலை ஏற்படலாம். முழு அமைப்புக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் பொறுப்பாளியாக நியமிக்கப்படலாம். நீங்கள் இந்தப் பயணத்தை ஆரம்பிக்கும்போது, உங்கள் கட்டளையின் கீழ் உள்ள வீரர்கள் சாதாரண மனிதர்களேயன்றி விசித்திரமானவர்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறான சாதாரண மனிதர்களின் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெறக்கூடிய வகையில் செயற்படுவது உங்களின் பொறுப்பாகும். இதனை நிறைவேற்றுவதற்கு உங்கள் பிரிவு நன்றாகப் பயிற்சி பெற்றதாகவும், ஆரோக்கியமானதாகவும், கடமைக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதுடன், அவர்களின் நல்வாழ்வு பற்றி நன்கு அவதானிக்க வேண்டியதோடு, அதன் மூலம் அவர்களின் மன உறுதி அதிகரிக்கும்.
நீங்களும் உடல் ரீதியான பயிற்சிகளின் போதும், பிற பயிற்சிகளின் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தங்குமிட வசதிகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அவர்களின் தலைவராக, உங்களுக்குக் கீழ் உள்ள அவர்களின் பெயர்கள், எங்கிருந்து வந்தார்கள், குடும்பப் பின்னணி என்ன, அவர்களின் குணநலன்கள் என்ன என்பதைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
அவர்களின் திறன்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அப்போது அவர்களை எவ்வகையான செயற்பாடுகளில் ஈடுபடுத்த முடியுமென்பது பற்றி தீர்மானிக்க முடியும். அவர்களின் மூலம் முடியுமானளவு பயன்களை பெற்றுக் கொள்ளவும் ஒரு தலைவராக திறமைகளை வெளிக்காட்டவும் உங்களால் முடியும்.
உங்கள் கட்டளையின் கீழ் உள்ளவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்வது மிகவும் முக்கியமாகும். அவ்வப்போது எழும் பின்னடைவுகள், தடைகள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும் மனிதர்களுக்கு தங்கள் பணியில் கவனம் செலுத்துவதற்கு ஊக்கப்படுத்தல் உதவுகிறது.
1980 களின் முற்பகுதியில் கஜபா படைப் பிரிவில் எனது கட்டளை அதிகாரியாக ஜெனரல் விஜய விமலரத்ன இருந்தார். 1984ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த பின்னர் கஜபா படைப் பிரிவு வட மாகாணத்தை கைப்பற்றிய போது, ஜெனரல் விமலரத்ன எங்களிடம் வழமையான ஆறு மாத கால நிவாரணத்தை முடிக்காமல் யுத்தம் முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்று கூறினார்.
அவர் எங்களை ஊக்குவித்த விதத்தின் காரணமாக, ஏனைய எந்தப் படையணியையும் விட நாங்கள் அங்கு அதிக காலம் ஓய்வெடுக்காமல் இருப்பதற்கு எமது விருப்பத்தைத் தெரிவித்தோம்.
2009 இல் முடிவடைந்த யுத்தம் முழுவதிலும், எமது இராணுவ வீரர்கள் மகத்தான தியாகங்களைச் செய்து, சொல்லொணா இன்னல்களை எதிர்கொண்டனர். பிரிவினைவாதத்துக்கு முகங்கொடுத்து இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பணியில் அவர்கள் அனைவரும் உறுதியாக இருந்தமையால் அவர்கள் அவ்வாறு செயற்பட்டனர்.
இராணுவத்தினருக்கு மட்டுமன்றி, பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில், நான் உட்பட யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட முழு நாட்டுக்கும் இந்த ஒத்துழைப்பில் ஆற்ற வேண்டிய கடமை உணர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக எடுத்துரைத்தார்.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஒத்துழைப்பு உணர்வுடன் செயற்பட்டதன் காரணமாக இலங்கையில் அமைதி மீண்டும் நிலைநாட்டப்பட்டது. இன்று இலங்கை அனுபவிக்கின்ற பாதுகாப்பு மற்றும் நிலையான தன்மையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.
இளம் அதிகாரிகளாகிய நீங்கள் உங்களுக்கு உள்ள பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலம், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்படுவதை உறுதிப்படுத்தும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உள்ளது.
நாங்கள் அனுபவித்த சூழலை விட நீங்கள் அனுபவிக்கும் சூழல் மிகவும் பாதுகாப்பானது மற்றும் நிலையானது என்றாலும், உங்கள் இராணுவ சேவையின் போது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களின் போது உங்கள் பயிற்சி, உங்கள் உள்ளுணர்வு மற்றும் உங்கள் அனுபவம் ஆகியவற்றில் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டியதோடு அச்சமின்றி தீர்மானங்களை எடுப்பதற்கு உங்களுக்கு தைரியமும் வேண்டும்.
ஒரு சில நேரங்களில் உங்களால் உயர்மட்டத் தவறுகள் ஏற்படலாம். தோல்விகளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதோடு, அதிலிருந்து நீங்கள் பின்வாங்கக் கூடாது. அவை உங்கள் கற்றல் செயல்முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மேலும் அவை உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும்.
இருப்பினும், நீங்கள் தோல்வியடைவோம் என்று பயந்தால், அத்தகைய தைரியமான முடிவுகளை எடுக்க நீங்கள் ஊக்குவிக்கப்பட மாட்டீர்கள். தீர்க்கமாக இல்லாததன் காரணமாக நீங்கள் எவ்வாறேனும் தோல்வியடைவீர்கள். எனவே நேர்மறையான சிந்தனை மிகவும் முக்கியமானது.
நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் உங்கள் மீதும் உங்கள் அணியில் உள்ளவர்கள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே உங்கள் வெற்றியின் மூலகாரணமாக இருக்கும்.
பெருமைக்குரிய இலங்கை இராணுவத்தின் புதிய அங்கிகரிக்கப்பட்ட அதிகாரிகள் என்ற வகையில், உங்களது பணிக்காலம் முழுவதும் நீங்கள் பெற்ற பயிற்சியை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
இறுதியாக உங்கள் எதிர்கால வாழ்வு எல்லா வகையிலும் வெற்றிபெற வேண்டுமென வாழ்த்துவதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.
No comments:
Post a Comment