கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் தனித்து பேச தீர்மானம் - சுதந்திர கட்சி - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 8, 2021

கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் தனித்து பேச தீர்மானம் - சுதந்திர கட்சி

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சி பிரதான கட்சியாக உள்ளது. கூட்டணி அமைக்கும் போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பல விடயங்கள் முறையாக செயற்படுத்தப்படவில்லை. கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் சுதந்திர கட்சி தனித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளது என சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி அரசாங்கத்தில் சுதந்திர கட்சி பிரதான பங்காளி கட்சியாக உள்ளது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் மாற்று தீர்மானத்தை முன்னெடுத்திருந்தால் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றிருக்காது.

அரசாங்கத்தின் நிர்வாகத்தின் மீது நாட்டு மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள். அரசாங்கத்தின் தீர்மானங்கள் மக்களுக்கு சாதகமாக அமைவதில்லை மாறாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்துள்ளதே தவிர குறைவடையவில்லை.

அரசாங்கத்தில் இருந்து சுதந்திர கட்சி வெளியேறுவது சிறந்தது என சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்கள். முன்வைக்கப்பட்ட யோசனைகளை பரிசீலனை செய்ய மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தல் காலத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னிலைப்படுத்தி பல்வேறு கட்சிளை ஒன்றினைத்து கூட்டணி அமைக்கப்பட்டது. கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதுவரையில் முறையாக செயற்படுத்தப்படவில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக கட்சிகளை புறக்கணிக்கும் செயற்பாட்டை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்னெடுக்கிறார்கள்.

வெறுக்கத்தக்க பேச்சுக்கள் கூட்டணிக்குள் தோற்றம் பெற்றுள்ள பல பிரச்சினைகளுக்கு மூல காரணியாக உள்ளது. சுதந்திர கட்சிக்கு எதிரான சேறுபூசல்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. அரச தலைவர்களின் ஆதரவுடன் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதியுடனும், பிரதமருடன் தனித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment