(நா.தனுஜா)
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையின் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு மீனுற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு குறிப்பிடத்தக்களவிலான வரிச் சலுகை அளிக்கப்படுகின்றது. இருப்பினும் கடந்த 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் போராடிப்பெற்றுக் கொண்ட அந்த வரிச் சலுகையை மீண்டும் இழக்கும் நிலையில் நாடு இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் நாட்டிற்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப்படும் பட்சத்தில் மீன்பிடித்துறையில் பாரிய தாக்கங்கள் ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, ஐரோப்பிய நாடுகளுக்கு மீனுற்பத்திகளை ஏற்றுமதி செய்யும்போது எமது நாட்டிற்கு வழங்கப்பட்டிருந்த வரிச் சலுகை சில காலத்திற்கு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் மீண்டும் அந்த வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.
அதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு மீனுற்பத்திகளை ஏற்றுமதி செய்தவர்கள் வெகுவாக நன்மையடைந்தனர். ஆனால் தற்போது மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் நிலையில் நாடு இருக்கின்றது.
தூரநோக்கு சிந்தனையின்றி இரசாயன உர இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் சடுதியாக மேற்கொண்ட தீர்மானத்தினால் தற்போது விவசாயிகள் மிக மோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அதுமாத்திரமன்றி நாட்டின் உணவுப் பாதுகாப்பு முற்றுமுழுதாகக் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏனைய நாடுகள் தமக்குத் தேவையான உணவை தமது நாடுகளிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்ற சூழ்நிலையில், எமது நாடு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றது. இதன் விளைவாக நாடு வெகுவிரைவில் உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மறுபுறம் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதன் காரணமாக மக்கள் வெகுவாக அச்சமடைந்துள்ளனர். ஆனால் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்பிரச்சினைகள் தொடர்பில் நாம் பாராளுமன்றத்தில் குரலெழுப்புவதால் எமக்கெதிராக அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு ஆளுந்தரப்பு முயற்சிக்கின்றது. ஆனால் இவற்றுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என்பதுடன் மக்களின் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் குரலெழுப்புவோம்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியதிலிருந்து அதன் தனிப்பட்ட தேவைகளை மாத்திரம் பூர்த்திசெய்து கொண்டிருப்பதுடன் ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் நலன்களை உறுதிசெய்து கொள்வதிலேயே விசேட அவதானம் செலுத்திவந்திருக்கின்றது.
ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தை மேலும் வலுப்படுத்தக் கூடிய வகையில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதேபோன்று இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளிலிருந்து சுமார் 45 பேர் முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆனால் சமையல் எரிவாயுவின் தரநியமம் மாற்றம் செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment