அரசாங்கம் 'ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட்' என்ற துணை நிறுவனத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளமை சந்தேகத்திற்குரியது : தேர்தல் காலப் பிரசார மேடையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய் - நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

அரசாங்கம் 'ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட்' என்ற துணை நிறுவனத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளமை சந்தேகத்திற்குரியது : தேர்தல் காலப் பிரசார மேடையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய் - நளிந்த ஜயதிஸ்ஸ

(இராஜதுரை ஹஷான்)

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 14 எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனம் வரி ஒப்பந்தம் இல்லாமல் நிர்வகிக்கின்றமை முறையற்றதாகும். இந்திய நிறுவனம் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு வழங்கப்பட்ட காலம் இன்னும் இரண்டு வருட காலப்பகுதியுடன் நிறைவு பெறும் தருணத்தில் அரசாங்கம் 'ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட்' என்ற துணை நிறுவனத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளமை சந்தேகத்திற்குரியது. தேசிய வள பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளமைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், விற்கப்பட்ட தேசிய வளங்களை மீள அரசுடமையாக்குவோம் என குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் மீதமுள்ள தேசிய வளங்கள் பறிபோகும் நிலை காணப்படுகிறது.

தேசிய வளங்கள், தேசியப்பற்று குறித்து தேர்தல் காலப் பிரசார மேடையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன.

கொழும்பு நகரில் உள்ள பெறுமதியான பல காணிகளை செலந்திவா என்ற நிறுவனத்தின் ஊடாக தனியார் தரப்பினருக்கு விற்பனை செயற்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தையும் பத்தரமுல்ல பகுதிக்கு கொண்டு செல்ல அரசாங்கம் நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தினால் இந்திய நிறுவனத்திற்கு முறையற்ற வகையில் வழங்கப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

1920 தொடக்கம் 1930 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காலணித்துவ ஆட்சியில் திருகோணமலை பகுதியில் 101 எண்ணெய் குதங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் கீழ் பகுதியில் 15 தாங்கிகளும் மேற்பகுதியில் 86 தாங்கிகளும் நிர்மாணிக்கப்பட்டன.

ஒரு எண்ணெய் தாங்கியில் 10 ஆயிரம் மெற்றிக் தொன் எண்ணெய் களஞ்சியப்படுத்த முடியும். உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானின் குண்டுத் தாக்குதலினால் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இரண்டு சேதமடைந்தன.

காலணித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை பெற்றதை தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இரண்டரை இலட்சம் ஸ்ரேலிங் பவுன்களை பிரித்தானிய கடற்படைக்கு கொடுத்து திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 99 தாங்கிகளையும் இலங்கைக்கு சொந்தமாக்கியது.

பிரித்தானிய கடற்படையிடமிருந்து திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை பெற்றுக் கொண்டதன் பின்னர் அவற்றை நிர்வகிப்பதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டம் இருக்கவில்லை.

1986 மற்றும் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இதனை தடுப்பதற்கு அப்போது இந்தியா தலையிட்டது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவ்வாறான பின்னணியில் 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது.

அப்போதைய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த மிலிந்த மொரகொட திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இவர்தான் இன்று இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பதவி வகிக்கிறார்.

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம், இந்திய நிறுவனம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் 2003ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தில் ஆறு மாத காலத்திற்கு பின்னர் வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரையிலான காலப்பகுதியில் வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

இந்திய நிறுவனம் ஒரு எண்ணெய் தாங்கிக்கு ஆயிரம் டொலர் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கி வருகிறது. இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி, விநியோகம் ஆகிய செயற்பாடுகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என கூட்டுத்தாபன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் வலு சக்தி அமைச்சர் இந்திய நிறுவனம் 20 ஆண்டு காலத்திற்கு எரிபொருள் இறக்குமதி செய்து அதனை விநியோகிப்பதற்கு அமைச்சரவை ஊடாக அனுமதி பெற்றுக் கொடுத்தார். இந்த இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்னும் இரண்டு வருட காலத்தில் நிறைவடையும்.

இன்னும் இரண்டு வருடத்தில் நிறைவடையும் இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வேண்டிய தேவை இந்திய நிறுவனத்திற்கு உண்டு. இவ்வாறான நிலையில்தான் வலுசக்தி அமைச்சர் புதிய நாடகத்தை தற்போது அரங்கேற்றியுள்ளார்.

வரி ஒப்பந்தம் இல்லாமல் இந்திய நிறுவனம் நாட்டில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுத்துள்ளது என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது. இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் இன்னும் இரண்டு வருட காலத்தில் நிறைவு பெறவுள்ளது. இக்காரணிகளை சாதகமாக கொண்டு இந்திய நிறுவனம் வசமுள்ள எண்ணெய் தாங்கிகளை அரசாங்கத்தினால் மீள பெற முடியும்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் பாவிக்க முடியாத நிலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இரகசியமான முறையில் 2004ஆம் ஆண்டு வழங்கப்பட்ட எரிபொருள் இறக்குமதிக்கான அனுமதிபிபத்திரத்தை நீடிப்பதற்கான முயற்சியினை வலுசக்தி அமைச்சர் மேற்கொண்டுள்ளமை பல காரணிகள் ஊடாக வெளிப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் பல விடயங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment