(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜாவுடனான சந்திப்பின்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டில் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான இடைவெளி சுருக்கமடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடு பொருளாதார ரீதியில் முகங்கொடுத்திருக்கக் கூடிய சவால்களிலிருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளரும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவிற்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்ட போதிலும் குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் அவற்றிலிருந்து மீட்சியடைதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரால் ஐ.நா உதவிப் பொதுச் செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதேபோன்று எதிர்க்கட்சியானது கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடளாவிய ரீதியில் தேவையுடைய வைத்தியசாலைகளை இனங்கண்டு, அவற்றுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ, அச்செயற்திட்டம் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
அதேவேளை நாடு பாரியதொரு சுகாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனைக் கையாள்வதற்கு அவசியமான செயற்திறன் வாய்ந்த நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கன்னி விக்னராஜாவிடம் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இருப்பினும் கடந்த வரவு, செலவுத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கென குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாடளாவிய ரீதியில் கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கக் கூடிய வீழ்ச்சி தொடர்பிலும் தடையற்ற கல்வியைப் பெறுவதில் மாணவர்கள் முகங்கொடுத்திருக்கக் கூடிய சவால்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதுமாத்திரமன்றி கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டில் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான இடைவெளி சுருக்கமடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான தலைமைத்துவத்தை எதிரணி வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது நாடு பல்வேறு விதத்திலும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதை ஏற்றுக் கொண்ட ஐ.நா உதவிப் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment