இலங்கை 2022, 2023 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக் கடன்களை செலுத்த பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் : இலங்கையை தமது தர வரிசையிலிருந்து ஒருபடி குறைத்தது "ஃப்ட்ச் ரேட்டிங்' நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

இலங்கை 2022, 2023 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக் கடன்களை செலுத்த பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் : இலங்கையை தமது தர வரிசையிலிருந்து ஒருபடி குறைத்தது "ஃப்ட்ச் ரேட்டிங்' நிறுவனம்

(ஆர்.யசி)

புதிய வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ள காரணத்தினால், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதில் பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ளவுள்ளதாகவும், 2022ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கடன்கள் மற்றும் கடனுக்கான வட்டியென வெளிநாட்டு மொத்த நாணயக் கடனாக 26 பில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி வரும் என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான 'ஃப்ட்ச் ரேட்டிங்' (Fitch Ratings) நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு இலங்கையை தமது தர வரிசையிலிருந்து ஒருபடி குறைத்துள்ளதாகவும், அதற்கமைய 'சி.சி.சி' தரப்படுத்தலில் இருந்து 'சி.சி' தரப்படுத்தலுக்கு இலங்கை பின்தள்ளப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் மூலமான தாக்கங்களின் பின்னர் இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் இலங்கை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 1.5 வீத வீழ்ச்சியை அறிவித்துள்ள நிலையில், தற்போது 'ஃப்ட்ச் ரேட்டிங்' நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையை தரவரிசையில் பின்தள்ள அவர்கள் கூறியுள்ள காரணமானது, அந்நிய செலாவணியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், அதேபோல் இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பானது, இலங்கை மத்திய வங்கியின் அதிக இறக்குமதி கட்டணம் மற்றும் வெளிநாட்டு நாணய தலையீடு ஆகியவற்றின் காரணமாக தமது இறுதி மதிப்பீட்டிற்கு அமைய எதிர்பார்த்ததை விடவும் மிக மோசமாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் குறைவடைந்துள்ளதுடன், நவம்பர் மாதத்தின் இறுதியில் இது 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.

ஒரு மாதத்திற்கும் குறைவான தற்போதைய வெளிப்புறக் கொடுப்பனவுகளுக்கு (CXP) சமமானதாக காணப்படுகின்றது எனவும், ஒப்பீட்டளவில் இது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சியைக் வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் 'ஃப்ட்ச் ரேட்டிங்' நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், புதிய வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையில் இலங்கை உள்ள காரணத்தினால், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதில் பாரிய நெருக்கடி நிலைமை இருக்கும் என்பதையும் தாம் அவதானித்துள்ளதாக ஃப்ட்ச் ரேட்டிங் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் தற்போதுள்ள நிலைமையில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த நவம்பர் மாத இறுதியில் 1.58 பில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 500 மில்லியன் டொலரையும், 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 1.0 பில்லியன் டொலரையும் மீளச் செலுத்த வேண்டியுள்ள காரணத்தினால் இலங்கைக்கு இது பாரிய சவாலை ஏற்படுத்தும் என்பதையும் கூறியுள்ளனர்.

அதேபோல், 2022ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கடன்கள் மற்றும் கடனுக்கான வட்டியென வெளிநாட்டு மொத்த நாணயக் கடனாக 26 பில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி வரும் எனவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய நிவாரணப் பொதி, கட்டார் மத்திய வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையிலான கடன், பிராந்திய ஒத்துழைப்புகள் மூலமாக நாணய பரிமாற்றல், சீன வங்கியின் கடன் வசதிகளை பெற்றுக் கொண்டாலும் கூட 2022 ஆம் ஆண்டில் முழுமையான கடன்களை அடைக்க போதுமான வேலைத்திட்டம் இல்லாதமை அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கும் என தாம் கருதுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் இலங்கை தனது தேசிய வருவாயை கூட்டிக் கொள்ளும் துறைகளிலும் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளது. குறிப்பாக கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் இலங்கையின் பிரதான வருவாய் துறையான சுற்றுலாத்துறை போன்றன வீழ்ச்சி கண்டுள்ளன.

2021 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பற்றாக்குறை 5.7 வீதமாக காணப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் இது 2.1 வீதத்தால் மேலும் குறைவடைவதுடன், 2022 ஆம் ஆண்டில் 4 வீதமாக பற்றாக்குறை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment