(லியோ நிரோஷ தர்ஷன்)
ஜனவரி 18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அமைச்சரவையிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களை தவிர ஏனைய அமைச்சுக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
நாட்டின் பொருளாதார நிலமைகளை சீர் செய்து மக்களின் குறைகளை தீர்க்கா விடின் அடுத்து வரும் எந்த தேர்தலும் ஆளும் கட்சிக்கு நெருக்கடியாகவே அமையும் என பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு குறிப்பிட்டுள்ளனர்.
எனவே ஜனவரியில் அமைச்சரவையில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் ஆளும் கட்சியின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்போகும் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆளும் கட்சிக்குள் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சித்தல் மற்றும் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுதல் போன்ற காரணிகளை மையப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ள முக்கியஸ்தர்கள் சிலரை பதவிகளிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான யுகதனவி மின்னிலைய ஒப்பந்தத்தை விமர்சித்து செயற்படும் அமைச்சர்களான உதய கம்மன்பில , விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இந்த பட்டியலில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதே போன்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஷரித ஹேராத் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மைய நாட்களாக வெளிப்படையாகவே அரசாங்கத்தை விமர்சிக்கும் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்தும் தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அனைவரும் ஒரே நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு அல்லாது எதிர்மறையான நிலைப்பாட்டுடையவர்கள் முழுமையாகவே ஓரங்கட்டப்படும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே போன்ற பாராளுமன்ற குழுக்களின் தலைமை பதிவிகள் மற்றும் முக்கிய அரச நிறுவனங்கள் சிலவற்றின் தலைமை பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment