வடக்கு கிழக்கில் சீனாவின் பிரசன்னத்தை விரும்பவில்லை : அமெரிக்கப் பயணத்தின் பெறுபேறுகளை ஜனவரியில் உணரலாம் : சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

வடக்கு கிழக்கில் சீனாவின் பிரசன்னத்தை விரும்பவில்லை : அமெரிக்கப் பயணத்தின் பெறுபேறுகளை ஜனவரியில் உணரலாம் : சுமந்திரன்

(ஆர்.ராம், எம்.நியூட்டன்)

வடக்கு, கிழக்கில் சீனாவின் பிரசன்னத்தினை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக பயணங்களின் பெறுபேறுகளை எதிர்வரும் வருடம் ஜனவரியிலிருந்து உணர்ந்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும் எனும் தலைப்பில் கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வு யாழ் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டுக் கொள்கைகள் இன்றிச் செயற்படவில்லை. முறையான அணுகமுறைகளைக் உரிய தருணங்களில் மேற்கொண்டே வந்திருக்கின்றது. அதனைப் பலர் அறிவதில்லை. தற்போது கூட அமெரிக்கப் பயணத்தின் பின்னர் இலங்கையில் உள்ள உயர்ஸ்தானிகர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களைச் செய்துள்ளேன். ஆனால் அந்தச் சந்திப்புக்கள் புகைப்படங்களை பிடித்து முகநூலில் போட்டு பிரசாரம் செய்வதற்குரியவை அல்ல.

ஆகவே வெளிவிவகார விடயங்களை முறையாக கையாளவில்லை என்ற கவலை யாருக்கும் தேவையில்லை. அது முறையாக முன்னெடுக்கப்பட்டே வரப்படுகின்றது. அதன் காரணமாகவே ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்னமும் தமிழர்களின் விவகாரம் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் எனது தலைமையில் அமெரிக்காவுக்குச் சென்ற குழுவானது முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டது. அந்தச் சந்திப்புக்கள் பற்றி இந்தப் பொது வெளியில் பகிரங்கமாக அனைத்தையும் கூறிவிட முடியாது.

ஆனால் 2011ஆம் ஆண்டு இவ்விதமானதொரு பயணம் நடைபெற்றது. அதன் பின்னர்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர்களின் பொறுப்புக் கூறல் உள்ளிட்ட விடயங்கள் சென்றிருந்தன தொடர்ச்சியாக அது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கரிசனையிலும் காணப்படுகின்றது.

அதேபோன்றுதான் தற்போதைய விஜயத்தின் பெறுபேறுகளை உடனடியாக கண்டுவிட முடியாது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அப்பெறுபேறுகளை அனைவரும் உணரக்கூடியதாக இருக்கும்.

தற்போது அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு நிரலில் உள்ள நிலையில் இந்தியாவை விட்டு அமெரிக்காவிடம் சென்றதாக விமர்சனம் செய்கின்றார்கள். அவ்வாறில்லை. இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்த நிலையில்தான் உள்ளது என்பதை நாம் அறிவோம்.

இரு நாடுகளும் இணைந்தே அடுத்த கட்ட விடயங்களை முன்னெடுக்கப்போகின்றன. வொஷிங்டனும் புதுடெல்லியும் அதுபற்றிய உரையாடலில் தொடர்ச்சியாக இருக்கின்றன. ஆகவே டெல்லிலை விட்டு வொஷிங்டனிடத்திலோ, வொஷிங்டனை விட்டு டெல்லியிடத்திலோ சென்றதாக அச்சப்படத் வேண்டியதில்லை

மேலும் வடக்கு கிழக்கில் சீனா பிரசன்னம் செய்வதை நாம் விரும்பவில்லை. இதனை நாம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தெரிவித்து விட்டோம். வடக்கு கிழக்கில் பிரச்சினைகள் தீர்க்கப்படாது நீடிப்பதை சில தரப்புக்கள் விரும்புகின்றன. ஆனால் அவ்விதமான நிலைமை தொடருமாக இருந்தால் வெளித்தரப்புக்களின் தலையீட்டுக்கு அது வழிவகுத்து விடும். ஆகவே பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாம் தெளிவாக கூறி விட்டோம்.

மேலும், வடக்கு கிழக்கில் சீன பிரசன்னத்தினை நாம் விரும்பவில்லை என்பதற்கு காரணங்கள் உள்ளன. குறிப்பாக சீனா மனித உரிமைகளையோ, ஜனநாயகத்தினையோ பொருட்டாக கொள்வதில்லை. அவ்வாறான நிலையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் ஜனநாயக முறையில் பொறுப்புக்கூறலையும் எதிர்பார்க்கும் தமிழ் தரப்பு சீனாவினை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரம், இலங்கைத் தீவும், வடக்கு, கிழக்கும் தென்சீனக் கடலில் இருக்கவில்லை. அது இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கு மிக அருகில் வெறும் 32 கிலோ மீற்றர் தொலைவிலேயே உள்ளது. அவ்வாறிருக்கையில் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளையே தமிழ்த் தரப்பு உள்வாங்கிக் கொள்ள முடியும்.

ஆகவே சீனாவின் பிரசன்னம் இந்தியாவுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். மேலும் இந்தியா தமிழர்கள் விடயத்தில் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளது. அவ்வாறான நிலையில் சீனாவை தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment