அரசின் பங்காளி கட்சியாக இருந்து ஒட்டு மொத்த சமூகத்தையும் காட்டிக் கொடுத்த கறுப்பாடுகள் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்காக கூவுகின்றனர் - ராஜாராம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

அரசின் பங்காளி கட்சியாக இருந்து ஒட்டு மொத்த சமூகத்தையும் காட்டிக் கொடுத்த கறுப்பாடுகள் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்காக கூவுகின்றனர் - ராஜாராம்

(க.கிஷாந்தன்)

"அரசின் பங்காளி கட்சியாக இருந்து, கைகட்டி மௌனம் காத்து, ஒட்டு மொத்த சமூகத்தையுமே காட்டிக் கொடுத்து கறுப்பாடுகளாக செயற்படுபவர்கள் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்காக கூவுகின்றனர். மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்." என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ராஜாராம் தெரிவித்தார்.

தலவாக்கலையில் இன்று (19.12.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வாங்கிக் கொடுத்து விட்டோம் என மார்தட்டி, கேக் வெட்டி தொழிற்சங்க பிரமுகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சம்பள உயர்வின் பயன் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு முன்னர் இருந்த சம்பளத்தை வைத்துகூட அம்மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

ஆனால் இன்று எத்தனை நாட்கள் வேலை வழங்கப்படும் என்பதுகூட கேள்விக்குரியாகவே இருக்கின்றது. முன்னர் எடுத்த சம்பளத்தை விடவும் குறைவான சம்பளமே கிடைக்கப் பெறுகின்றது. மக்களின் வாழ்வில் நிம்மதியும் இல்லை.

அக்கரப்பத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உரிய தீர்வை வாங்கிக் கொடுப்பதற்கு முன்னரே வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்படியானால் எதற்காக தொழிலாளர்களை போராட்டத்துக்கு இறக்க வேண்டும்? மக்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு இராஜாங்க அமைச்சர் பொறுப்புகூற வேண்டும்.

கூட்டு ஒப்பந்தம் இல்லாததால்தான் பிரச்சினையென காரணம் காட்டி, கூட்டு ஒப்பந்தத்துக்காக தொழிலாளர்களை தூண்டிவிடுகின்றனர். அன்று சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் போது, கூட்டு ஒப்பந்தம் இல்லாவிட்டால் சிக்கல் வரும் என்ற தூரநோக்கு சிந்தனை இவர்களிடம் இருக்கவில்லையா? தொழிலாளர்களை வஞ்சிக்கும் கூட்டு ஒப்பந்தத்துக்காகவே இவர்கள் செயற்படுகின்றனர். அரசில் அங்கம் வகிக்கின்றனர். அரசின் பலம் இருக்கின்றது. அதனை பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு ஏன் நியாயத்தை பெற்றுக் கொடுக்க முடியவில்ல?

அரசின் பங்காளி கட்சியாக இருந்து, கைகட்டி மௌனம் காத்து, ஒட்டு மொத்த சமூகத்தையுமே காட்டிக் கொடுத்து கறுப்பாடுகளாக செயற்படுபவர்கள், பிரச்சினைகள் வரும்போது மட்டும் தொழிலாளர்களை தூண்டிவிடுகின்றனர். தாங்கள் அரசுக்குள் இருக்கின்றோம் என்பதை மறந்து விடுகின்றனர்.

வரவு செலவுத் திட்டம் ஊடாகக்கூட எமது மக்களுக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் ஆணைக்குழு அமைக்கப்படும் என தொழில் அமைச்சர் இப்போது கூறுகின்றார். பாதீட்டில் கவனம் செலுத்தாதவர்கள் குழு அமைத்து தீர்வை தருவார்களா? இது வேடிக்கையான விடயம்.

அதேவேளை, இன்று வடக்கையும் குறிவைத்துள்ள சீனா, நாளை மலையகத்திலுள்ள தரிசு நிலங்களிலும் காலூன்ற முற்படலாம். அதற்கான வழியை இந்த அரசு அமைத்துக்கொடுக்கும். எனறார்.

No comments:

Post a Comment