பெற்றுக் கொள்ளாத உரத்திற்கு கட்டணம் செலுத்தும் நாடு உலகில் வேறெங்குமில்லை : அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி போர்க் கொடி - News View

About Us

About Us

Breaking

Saturday, December 18, 2021

பெற்றுக் கொள்ளாத உரத்திற்கு கட்டணம் செலுத்தும் நாடு உலகில் வேறெங்குமில்லை : அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி போர்க் கொடி

(இராஜதுரை ஹஷான்)

சீன உர நிறுவனத்திற்கு மக்களின் வரிப்பணத்தின் ஊடாக நட்டஈடு செலுத்துவது தவறான தீர்மானமாகும். முறையற்ற உர கொள்வனவுடன் தொடர்புடைய அமைச்சர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து 6.7 மில்லியன் நட்டஈடு செலுத்தப்பட வேண்டும். பெற்றுக் கொள்ளாத உரத்திற்காக கட்டணம் செலுத்த தீர்மானித்துள்ள நாடு உலகில் வேறெங்குமில்லை என தேசிய ஆடையுற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தாவரவியல் பரிசோதனை மத்திய நிலையத்தினால் புறக்கணிக்கப்பட்ட உரத்தை பெற்றுக் கொள்ள மாட்டோம். அதற்கு கட்டணமும் செலுத்த மாட்டோம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆரம்பத்தில் குறிப்பிட்டார். தற்போது அக்கருத்து முழுமையாக மாற்றமடைந்துள்ளது.

சீன நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்ட உரம் இலங்கையின் காலநிலைக்கும்,மண் வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகளை உள்ளடக்கியுள்ளது என தேசிய தாவரவியல் மற்றும் பரிசோதனை மத்திய நிலையம் அறிவித்ததை தொடர்ந்து உர கப்பல் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நிராகரிக்கப்பட்ட உரத்திற்கு 6.7 மில்லியன் நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறானதாகும். பெற்றுக் கொள்ளாத உரத்திற்காக மக்களின் வரிப் பணத்தை எவ்வாறு செலுத்த முடியும். முறையற்ற வகையில் உர கொள்வனவில் ஈடுபட்ட அமைச்சர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து அத்தொகை செலுத்தப்பட வேண்டும்.

பொருத்தமற்ற உரத்தை கொள்வனவு செய்தது பொதுமக்களின் தவறல்ல அது ஒரு தரப்பினரது தவறான தீர்மானமாகும். அரசியல்வாதிகளினதும், ஒரு சில அதிகாரிகளினதும் தவறான தீர்மானங்களுக்கு பொதுமக்கள் பொறுப்புக்கூற வேண்டிய தேவையில்லை என்றார்.

No comments:

Post a Comment