அவசரமானதும் தெளிவற்றதுமான சர்வதேச தரப்படுத்தலால் கவலையில் இலங்கை மத்திய வங்கி - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

அவசரமானதும் தெளிவற்றதுமான சர்வதேச தரப்படுத்தலால் கவலையில் இலங்கை மத்திய வங்கி

(நா.தனுஜா)

அண்மையில் சர்வதேச தரப்படுத்தல் முகவராண்மை நிறுவனங்களால் இலங்கையைத் தரமிறக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட அவசரமானதும் தெளிவற்றதுமான தீர்மானங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாக, விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சில வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் கடன் மீளச் செலுத்துகை ஆற்றல், நிதி இயலுமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையை 'சிசி' நிலைக்குத் தரமிறக்கியிருந்ததுடன் ஏற்கனவே மூடியின் முதலீட்டாளர் சேவையும் இலங்கையைத் தரமிறக்கியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் தற்போதைய வெளிநாட்டுக் கையிருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல் தொடர்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறான கரிசனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அண்மைய உட்பாய்ச்சல்களைத் தொடர்ந்து தற்போதைய வெளிநாட்டுக் கையிருப்பின் பெறுமதி 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்திருக்கும் அதேவேளை, பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமையை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி வெளியிடப்பட்ட ஆறு மாத கால வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டவாறு தற்போது பேச்சுவார்த்தை மட்டத்திலுள்ள ஏனைய வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் எதிர்வரும் ஜனவரி மாத ஆரம்பத்தில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர் பணவனுப்பல்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்களின் அறிமுகம், ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்பல் தொடர்பான விதிகள் உள்ளடங்கலாக வெளிநாட்டுச் செலாவணியின் திரவத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் வெளிநாட்டுக் கையிருப்பின் அதிகரிப்பிற்குப் பங்களிப்புச் செய்துள்ளன.

அதுமாத்திரமன்றி சுற்றுலாத் துறையின் வலுவான மீட்சி, ஏற்றுமதிகளின் உறுதியான செயலாற்றம் என்பனவும் அதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

எனவே அடுத்த ஆண்டு முழுவதும் வெளிநாட்டுக் கையிருப்பு போதியளவான மட்டத்தில் பேணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் எதிர்வரும் காலங்களில் கிடைக்கப் பெறவுள்ள வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் தொடர்பில் தெளிவாக உறுதிப்படுத்தியிருந்த போதிலும், நாட்டை தரமிறக்குவதற்கு சில தரப்படுத்தல் முகவராண்மை நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட அவசரமானதும் தெளிவற்றதுமான தீர்மானங்கள், இலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்ட பன்னாட்டு முறிகளின் முதலீட்டாளர்களுக்கு இரண்டாந்தரச் சந்தையில் அநாவசியமான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தமை துரதிஷ்டவசமானதாகும்.

அதுமாத்திரமன்றி அத்தகைய தரப்படுத்தல்கள் முதலீட்டாளர்கள் நம்பிக்கையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதன் விளைவாக எதிர்பார்க்கப்பட்ட சில வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே தரப்படுத்தல் முகவராண்மை நிறுவனங்களால் மேற்குறிப்பிட்டவாறான ஆதாரமற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்காவிடின், வெளிநாட்டுக் கையிருப்பின் நிலை முன்னரேயே சாதகமான மட்டத்தை அடைந்திருக்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment