(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது அமைச்சுகளுக்காக நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆகியோர் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமக்கு வாய்ப்பளிக்குமாறு கோரி ஆளும் கட்சியின் எம்.பிக்கள் 33 பேரும் சபாநாயகரிடம் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
வரவு செலவு திட்ட விவாதத்தை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சி இணக்கம் தெரிவிக்காது சபை அமர்வுகளை புறக்கணித்து வருகின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை கண்டித்துள்ளது.
தமக்கு சபையில் உரையாற்றவும் மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கவும் முடியாதுள்ளள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து அவர்கள் தமது கையெழுத்துடன் கூடிய கடிதங்களை கையளித்துள்ளனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சம்பிரதாய பூர்வமாக வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாத்தின் போது தொகைக் குறைப்பை செய்து விவாதத்தை ஆரம்பித்து வைப்பது வழமையாகும்.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து வருகின்ற காரணமாக அந்த விவாதம் நடத்தப்படாது இருப்பதாகவும் இதனால் தொகைக் குறைப்பை செய்து விவாதத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பை தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான டயனா கமகேவும் சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை வரவு செலவுத் திட்டம் மீதான எதிர்வரும் விவாதங்களில் ஆளும் கட்சிக்கான நேரத்தில் தமக்கும் நேரத்தை ஒதுக்கி அதில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு ஆளும் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 33 பேர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment