சமைக்க செல்லும் பெண்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை : புதிய அரசொன்றை உருவாக்க அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர் - விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 5, 2021

சமைக்க செல்லும் பெண்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை : புதிய அரசொன்றை உருவாக்க அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர் - விஜித ஹேரத்

இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய, அதேபோல மக்களுக்கு சேவைகளை செய்யக்கூடிய அரசொன்றை உருவாக்குவதற்கு அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர் என்று ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்ணணியின் “ஊரிலிருந்து தொடங்குவோம்” என்ற தொனிப்பொருளிலான மக்களுடானான உரையாடலும், துண்டுபிரசுர விநியோகமும் அட்டன் நகரில் இடம்பெற்றது.

இன்று (05) காலை 10.00 மணியளவில் அட்டன் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத், நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் மஞ்சுள சுரவீர, உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதுடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த செயற்றிட்டமானது மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதில் கலந்து கொண்ட பின்னர் எரிவாயு அடுப்புகள் வெடிப்பு உட்பட சமகால நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நாட்டில் தற்போது எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறி வருகின்றன. இதற்கான காரணங்களை கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு துரிதம் காட்டவில்லை. 

மாறாக எரிவாயு அடுப்பு வெடிப்புக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லையென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தனது இயலாமையையும், பலவீனத்தையும் மறைப்பதற்காகவே இப்படியான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். 

நாட்டில் ஏற்பட்ட மின் விநியோக துண்டிப்புக்கும் இதே பாணியில்தான் முட்டாள்த்தனமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். கேஸ் சிலிண்டர்களின் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலேயே வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை, சமையலறைக்கு சமைக்க செல்லும் பெண்களுக்கு இன்று உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எந்நேரத்தில் வெடிப்பு சம்பவம் இடம்பெறும் என்ற அச்சம் உள்ளது. 

இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஆட்சியை உருவாக்குவதற்கு தமிழ், சிங்கம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர். நாளை வேண்டுமானாலும் அவர்கள் இதனை செய்வார்கள் என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment