(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
எரிவாயு சிலிண்டர்களில் இடம்பெற்ற இரசாயன கலவையின் அளவில் இடம்பெற்ற மாற்றமே சிலிண்டர்கள் தீப்பற்ற காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் பூதாகாரமாகியுள்ள சமையல் எரிவாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சு, வர்த்தக அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் எரிவாயு சிலிண்டர் பிரச்சினைக்கு தீர்வாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையானது நிறுவனங்கள் மற்றும் வீட்டுப் பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை மீள பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. ஆயினும் அந்த எரிவாயு சிலிண்டர் திறக்கப்படாமல் இருப்பது அவசியம் என கேட்டுக் கொண்டுள்ளது. அது எந்த வகையிலும் சாத்தியமாகாது.
ஏனெனில் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ உபயோகத்திற்காக எடுத்துச் செல்பவர்கள் அதனை உடனடியாகவே பாவனைக்கு எடுத்திருப்பார்கள் என்பதை நுகர்வோர் அதிகார சபை புரிந்து கொள்ள வேண்டும்.
அதனால் திறக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்களையும் மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு சிலிண்டர்கள் பாவிக்கப்பட்டிருந்தால், அந்த சிலிண்டர்களின் பாரத்தை நிறுத்துப்பார்த்து, அதற்கான செலவை கழித்து, சிலிண்டர்களை மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment