பிரதமர் பயன்படுத்திய ஜெட் விமானம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் : 69 இலட்சம் மக்களைப் பார்த்து 'இப்போது சுகமா?' என கேட்கமாட்டோம் - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

பிரதமர் பயன்படுத்திய ஜெட் விமானம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் : 69 இலட்சம் மக்களைப் பார்த்து 'இப்போது சுகமா?' என கேட்கமாட்டோம் - மனுஷ நாணயக்கார

(நா.தனுஜா)

அண்மையில் பிரதமர் திருப்பதிக்குச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கும் நிலையில், குறித்த ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததா? அல்லது திருப்பதிக்கான ஜெட் விமானப் பயணம் மாத்திரம் பரிசாகக் கிடைத்ததா? குறித்த ஜெட் விமானம் தூதுவர் கனநாதனுக்குச் சொந்தமானதா? ஆமெனில் அதனைக் கொள்வனவு செய்வதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது? ஆகிய விடயங்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, இரசாயன உர இறக்குமதித் தடையினால் விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, சமையல் எரிவாயு சிலிண்டர் சார் வெடிப்பு சம்பவங்கள், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, பொருட்களுக்கான விலையேற்றத்தினால் வாழ்க்கைச் செலவு உயர்வு, பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளடங்கலாக பொதுமக்கள் மிக மோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்த 2021 ஆம் வருடம் தற்போது முடிவிற்கு வந்திருக்கின்றது.

ஆனால் இந்த நெருக்கடிகளின் அடுத்த கட்ட விளைவுகள் பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி தோல்வியடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் கடந்த வருடம் 'சேர் பெயில்' என்று கூறினோம். ஆனால் இவ்வருட முடிவில் தனது செயலாளர், ஏனைய அரச கட்டமைப்புக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் தோல்வியடைந்திருப்பதாக ஜனாதிபதியே கூறத் தொடங்கியிருக்கின்றார். ஆகவே ஜனாதிபதியின் தோல்வியே ஏனைய அதிகாரிகளின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றது.

தனியார் ஜெட் விமானத்தில் பிரதமர் திருப்பதிக்குச் சென்ற வருடம் என்ற அடிப்படையிலும் 2021 முக்கியத்துவம் பெறுகின்றது. பொதுவாக புதிய கார் அல்லது ஏதேனும் வாகனங்களை வாங்கினால் கதிர்காமத்திற்குச் செல்வது வழமையாக நடைபெறும் விடயமாகும். இருப்பினும் சிலர் அவர்களது இயலுமைக்கு ஏற்றவாறு திருப்பதிக்கும் சென்றுவருவார்கள்.

ஏனெனில் இந்த ஜெட் விமானம் சென் மெரினோ இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலிக்கு அண்மையிலுள்ள இந்த நாட்டில் பணத்தை இரகசியமாக மறைத்து வைக்க முடியும் என்பதுடன் கடந்த காலங்களில் சிலர் இத்தாலிக்குச் சென்று திரும்பும்போது சென் மெரினோ இராச்சியத்திற்கும் சென்று வந்ததாக எமக்கு அறியக்கிடைத்தது.

ஆனால் இந்த ஜெட் விமானம் உகண்டாவின் தூதுவராக இருந்த கனநாதன் என்ற நபரின் ஊடாகவே நாட்டை வந்தடைந்திருக்கின்றது. இது பரிசாகக் கிடைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கும் நிலையில், குறித்த ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததா? அல்லது திருப்பதிக்கான ஜெட் விமானப் பயணம் மாத்திரம் பரிசாகக் கிடைத்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமாத்திரமன்றி குறித்த தூதுவருக்கு எவ்வாறு ஜெட் விமானம் கிடைத்தது? இது அவருக்குச் சொந்தமானது என்றால், அதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது? இவை தொடர்பில் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இது இவ்வாறிருக்கையில், நாடு நெருக்கடியில் இருப்பதால் டுபாய் விஜயத்தை இரத்துச் செய்வதாகப் பிரதமர் கூறுகின்றார். அவ்வாறெனின் திருப்பதி விஜயத்தின்போது அதனை அவர் உணரவில்லையா?

அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளால் நாட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களைப் பார்த்து 'இப்போது சுகமா?' என்று கேட்கமாட்டோம்.

மாறாக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மக்களின் பிரச்சினைகளுக்கு அவசியமான தீர்வைப் பெற்றுக் கொடுத்து, நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான தெளிவான வேலைத்திட்டத்துடன் 2022 ஆம் ஆண்டை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி நாட்டின் ஆட்சிமாற்றமொன்றை முன்னிறுத்தி மக்களனைவரும் ஒன்றிணையும்போது அதற்கு நாம் உரியவாறான தலைமைத்துவத்தை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment