(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
புவி சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளராக மட்டக்களப்பு மாவட்டத்திலே 10 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். 10 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒருவரை அமைச்சு ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கின்றது என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சு தொடர்பில் கேள்வி ஒன்றை முன்வைத்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், மணல் அகழ்வு என்பது இந்த நாட்டில் பாரிய கொள்ளைச் சம்பவமாகவே இடம்பெறுகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஒரு நாளைக்கு 500 க்கும் மேற்பட்ட லொறிகளில் மணல் மாவட்டத்தை விட்டு வெளியேறுவது மாத்திரமல்லாது ரயில் மூலமாகவும் மணல் மாவட்டத்தை விட்டு வெளியேறுகின்றது.
புவி சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளராக மட்டக்களப்பு மாவட்டத்திலே 10 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். அரச திணைக்களங்களிலே உயர் அதிகாரிகள் கடமையாற்றும் போது 5 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் அந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இந்த நாட்டின் வழமையாக இருக்கின்றது.
இந்த புவி சரிதவியல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எப்படி 10 வருடங்களுக்கும் மேலாக ஒரு மாவட்டத்திலே கடமையாற்றுகின்றார்? அரசியல் செல்வாக்குடன் அவர் கடமையாற்றுகின்றார் என்றால் அந்த அரசியல் செல்வாக்கை செலுத்துபவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட அனுமதிப் பத்திரங்களை வைத்திருக்கின்றனர்.
அந்த வகையில் புவி சரிதவியல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராக 10 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒருவரை நீங்கள் ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கின்றீர்கள் என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் நான் ஏற்கனவே உங்களிடம் கூறிய போது நீங்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தீர்கள். ஆனால் இதுவரை இது தொடர்பில் அங்கு எந்த வித முன்னேற்றமான நடவடிக்கையும் இடம்பெறவில்லை. எனவே இது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment