சிறில் காமினி தற்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என CID யினர் அறிவிப்பு : அருட் தந்தைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்திற்கு முன் அமைதிப் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 7, 2021

சிறில் காமினி தற்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என CID யினர் அறிவிப்பு : அருட் தந்தைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்திற்கு முன் அமைதிப் போராட்டம்

அருட்தந்தை சிறில் காமினி தற்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) இதனை அறிவித்துள்ளது.

தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை (FR) மனு இன்று (08) பரிசீலிக்கப்பட்டபோதே CID யினர் இவ்விடயத்தை அறிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்ற ஒன்லைன் மூலமான கலந்துரையாடலில் அருட் தந்தை சிறில் காமினி உள்ளிட்டோர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி CID யில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.

தற்கொலை குண்டு வெடிப்புக்கு பின்னால் இருந்த பிரதான சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) தலைவர் ஸஹ்ரான் ஹாசிமுக்கு நாட்டின் புலனாய்வுப் பிரிவானது, நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியதாக, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினரான அருட் தந்தை சிறில் காமினி கருத்து வெளியிட்டதாக, குறித்த முறைப்பாட்டில் சுரேஷ் சாலே குறிப்பிட்டுள்ளார்.

ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது ஆதரவாளர்களை வளர்ப்பதில் அப்போதைய பிரிகேடியராக இருந்த சுரேஷ் சாலே முக்கிய பங்காற்றியதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ள சுரேஷ் சாலே இவ்விடயங்களை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக அருட் தந்தை சிறில் காமினிக்கு CID அழைப்பு விடுத்திருந்தது.

ஆயினும் தமக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குமாறு, அருட் தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அருட் தந்தை தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கடந்த 03ஆம் திகதி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதன் பின்னர், தாம் இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தற்போதைக்கு ஆஜராகப் போவதில்லையென கடந்த 03ஆம் திகதி தனது சட்டத்தரணிகள் ஊடாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதற்கமைய, இம்மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம், அருட் தந்தை சிறில் காமினி தற்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக CID திணைக்களம் இன்று நீதிமன்றிற்கு அறிவித்திருந்தது.

CID பணிப்பாளர் சார்பில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரோஹண அபேசுந்தர இதனை மன்றுக்கு அறிவித்திருந்தார்.

இதன்போது, அருட்தந்தை சிறில் காமினி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரின்சி அர்சகுலரத்ன, தனது கட்சிக்காரர் CID முன் ஆஜராகி, உரிய நேரத்தில் வாக்கு மூலம் அளிக்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதனை கருத்திற் கொண்ட மூவரடங்கிய நீதியரசர் குழாமின் தலைவரான நீதியரசர் விஜித் மலல்கொட, மனுதாரை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து வாக்கு மூலம் பதிவு செய்ய போதிய கால அவகாசம் வழங்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, அருட் தந்தை சிறில் காமினியை கைது செய்யக் கூடாது எனக் கோரி, இன்று காலை உச்ச நீதிமன்றத்திற்கு முன்பாக கத்தோலிக்கப் பாதிரியார்கள், அருட் சகோதரிகள் உள்ளிட்ட பலர் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment