சீன சேதன உரத்தினை மீண்டும் பரிசோதனைக்குட்படுத்த தீர்மானம் - அமைச்சர் மஹிந்தானந்த - News View

Breaking

Wednesday, November 24, 2021

சீன சேதன உரத்தினை மீண்டும் பரிசோதனைக்குட்படுத்த தீர்மானம் - அமைச்சர் மஹிந்தானந்த

(எம்.மனோசித்ரா)

சீன சேதன உரத்தின் மாதிரிகளை மீண்டும் பெற்று பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உரப் பிரச்சினையால் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையில் எவ்வித முரண்பாடும் ஏற்படவில்லை என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் குறித்த பிரச்சிரனை இலங்கைக்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையிலானதல்ல. குறித்த சீன உரக் கப்பல் நிறுவனத்துடனானதாகும்.

நாம் எமது விதிமுறைகள் குறித்து அவர்களுக்கு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இரு தரப்பிலும் ஏற்பட்ட புரிந்துணர்விற்கமைய குறித்த உரத்தின் மாதிரிகளை மீண்டும் பெற்று பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் தற்போது இவ்விடயம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இது தொடர்பில் மேலதிக நிலைப்பாடுகளை என்னால் தெரிவிக்க முடியாது.

இந்த உரப் பிரச்சினையால் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது. எனினும் இலங்கையின் சட்ட விதிமுறைகள் குறித்த நிலைப்பாட்டில் நாம் ஸ்திரமாகவுள்ளோம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment