(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கையின் கோலூன்றிப் பாய்தல் வீராங்கனையான சச்சினி பெரேரா 3.60 மீற்றர் உயரம் பாய்ந்து பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனையைப் படைத்தார்.
57 ஆவது இராணுவ மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு தேசிய சாதனையும், 3 இலங்கை இராணுவ மெய்வல்லுநர் போட்டிச் சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்கேற்ற இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியைச் சேர்ந்த சச்சினி பெரேரா 3.60 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்துடன், தேசிய சாதனையையும் படைத்தார். இது இலங்கை இராணுவ மெய்வல்லுநர் போட்டி சாதனையாகவும் பதிவாகியிருந்தது.
இதேவேளை, இலங்கை இராணுவத்தின் இலத்திரனியல் படையணியில் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன் மற்றும் இலங்கை இராணுவத்தின் சேவைப் படையணின் எச்.எஸ்.ஈ.ஜனித் இருவரும் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5.00 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கை இராணுவ மெய்வல்லுநர் சாதனையை பகிர்ந்துக்கொண்டனர்.
ஆண்களுக்கான 4 தர 200 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியை 1நிமிடம் 23:74 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படையணியினர் இலங்கை இராணுவ மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் சாதனையை படைத்திருந்தனர்.
No comments:
Post a Comment