நெளபர் மௌலவி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு : குற்றப்பத்திரங்களை தமிழில் வாசிக்குமாறு கோரியதையடுத்து நீதிமன்றம் அனுமதி - News View

Breaking

Tuesday, November 23, 2021

நெளபர் மௌலவி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு : குற்றப்பத்திரங்களை தமிழில் வாசிக்குமாறு கோரியதையடுத்து நீதிமன்றம் அனுமதி

2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 2022 ஜனவரி 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் (23) தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா, நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் மேல் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இத்தீர்மானத்தை நீதிமன்றம் அறிவித்தது.

இதன்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரங்களை தமிழில் வாசிக்குமாறு கோரியதையடுத்து, குற்றச்சாட்டை தமிழில் மொழி பெயர்ப்பதற்கான கோரிக்கையையும் கால அவகாசத்தையும் கருத்தில் கொண்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 10 பேர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, சரளமாக தமிழ் தெரிந்த சட்டத்தரணிகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு நீதிமன்றம் நினைவூட்டல் ஒன்றையும் அனுப்பி வைத்தமை விசேட அம்சமாகும்.

No comments:

Post a Comment