ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்து மீண்டும் இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கா? : புலம்பெயர்ந்தோரை முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தது உண்மையான நன்னோக்கிலா ? - ஹர்ஷடி சில்வா கேள்வி - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்து மீண்டும் இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கா? : புலம்பெயர்ந்தோரை முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தது உண்மையான நன்னோக்கிலா ? - ஹர்ஷடி சில்வா கேள்வி

(ஆர்.யசி.,எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றோம் என ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்து மீண்டும் இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கா என கேட்கின்றேன். புலம்பெயர் இலங்கையர்களை நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்திருக்கும் ஜனாதிபதி இங்கு இவ்வாறான கருத்து தெரிவிப்பதால் ஜனாதிபதி புலம்பெயர் மக்களுக்கு விடுத்த அழைப்பு உண்மையாக மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு, பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என தெரிவிக்கப்பட்டது. என்றாலும் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றோம் என ஜனாதிபதி தெரிவித்த கருத்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தெரிவிக்கப்பட்டதா அல்லது மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சா என கேட்கின்றோம்.

இவ்வாறு பேசி மக்கள் இனங்களுக்கிடையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியுமா? தேர்தலில் வாக்குகளை எதிர்பார்த்தா இவ்வாறு பேசுவது?. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்திருக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் எமது ஜீ.எஸ்.பி, சலுகையை நிறுத்துவதற்கு தீர்மானித்திருக்கும் நேரத்தில் ஏன் இவ்வாறு ஜனாதிபதி பேச வேண்டும்.

அத்துடன் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பது தொடர்பான பல பரிந்துரைகளை மஹிந்த ராஜபக்ஷ் நியமித்த எல்.எல்.ஆர்.சி. ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரைகளை நாங்கள் செயற்படுத்த தவறினோம். அதனால்தான் எமக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அதனால் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எல்.எல்.ஆர்.சி. ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பாேம். அதேபாேன்று இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த உடன்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டு 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

மேலும் நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றது. எமக்கு டொலர் இல்லை. துறைமுகத்தில் அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பல கொள்களன்கள் தேங்கி இருக்கின்றன. அதனை வெளியில் கொண்டுவர டொலர் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.

அப்படியாயின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சர்தேசத்துடன் பேசும் பொறுப்பு வெனிவிவகார அமைச்சருக்கு இருக்கின்றது. இந்தியா, கட்டார், அமெரிக்கா, ஓமான் நாடுகளில் இருந்து டொலர் கிடைப்பதாக தெரிவித்தனர். கிடைத்ததா என கேட்கின்றேன். பங்களாதேஷிடம் இருந்து மாத்திரம் 250 டொலர் மில்லியன் கிடைத்திருக்கின்றது.

இந்தியாவுக்கு 18 மாதங்களாக தூதுவர் ஒருவர் இருக்கவில்லை. இந்த நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஒரு இரவில் கிழித்து எறிந்து விட்டீர்கள். அதேபோன்று சீனாவுடன் தேவையற்ற பிரச்சினை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

எமது மக்கள் வங்கி கறுப்பு பட்டியலில் இருக்கின்றது. அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கதைப்பதை காணவில்லை. சீனாவுக்கான எமது தூதுவர் என்ன செய்கின்றார் என தெரியாது. ஜீ.எஸ்.பி. பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக் கொள்வது. அது இல்லாமல்போனால் எமது ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல்போகும்.

அத்துடன் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாாரத்தை கட்டியெழுப்ப முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டுவர வெளிவிவகார அமைச்சர் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார்.

புலம்பெயர்ந்து வாழ்பவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடி, அவர்களின் நிதியை இலங்கையில் முதலீடு செய்யுமாறு தெரிவித்திருந்தார். அதனை நல்ல நோக்கில் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் ஜனாதிபதி களனி பாலத்தை திறந்துவைத்து ஆற்றிய உரையில் தெரிவித்த விடயமும் இந்த விடயமும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகின்றது.

அதனால் ஜனாதிபதி புலம்பெயர் மக்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்ததை உண்மையாக செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் அங்கு ஒன்றும் இங்கு வேறு ஒன்றும் தெரிவித்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார்.

No comments:

Post a Comment