புலம்பெயர் தமிழர்களின் அரசியல்போக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் : சிறுபான்மையினரை உள்ளடக்கிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் - ரோஹித போகொல்லாகம - News View

Breaking

Wednesday, November 24, 2021

புலம்பெயர் தமிழர்களின் அரசியல்போக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் : சிறுபான்மையினரை உள்ளடக்கிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் - ரோஹித போகொல்லாகம

(நா.தனுஜா)

தேசிய நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கான நடவடிக்கைகளின்போது புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழும் சர்வதேச நாடுகளின் அரசியல்போக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கனடா, பிரிட்டன் உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளிலும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் படிப்படியாக அந்நாடுகளில் தமக்கென அரசியல் ரீதியான தலைமைத்துவத்தையும் இருப்பையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஊக்குவிக்கின்ற நாடுகள் பெருமளவான புலம்பெயர் தமிழர்களைக் கொண்ட நாடுகளாக இருக்கின்றன என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி தேசிய நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென 'சுயாதீன நல்லிணக்கப் பேரவை' என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் சிறுபான்மையின தமிழ், முஸ்லிம்கள் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து இனக் குழுமத்தையும் உள்வாங்கக் கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆணைக்குழுவிடம் பரிந்துரைத்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச் செய்தல் ஆகியவற்றுக்காக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நான்காவது தடவையாக ஆஜரான ரோஹித போகொல்லாகம, தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அண்மைக் காலங்களில் வலுவடைந்து வரும் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகம், இலங்கை குறித்த மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்தார்.

ஆணைக்குழுவின் முன்னிலையில் அவரால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள் வருமாறு, தீவிரவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கை வெற்றி கண்டிருக்கின்றது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஓர் இடைவெளி உணரப்படுகின்றது.

குறிப்பாக அக்காலப்பகுதியில் இலங்கையின் பாரம்பரிய தமிழ் அரசியல் தலைமைகளினதும் போரின்போது இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்ற 'டயஸ்போரா' என்று அழைக்கப்படுகின்ற புலம்பெயர் தமிழர்களினதும் வகிபாகம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.

ஏனெனில் தேசிய நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கைகளின்போது புலம்பெயர் தமிழர்கள் குறித்து மாத்திரமன்றி அவர்கள் பரந் வாழக்கூடிய சர்வதேச நாடுகளின் அரசியல்போக்கு மற்றும் தலைமைத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவேண்டும்.

ஏனெனில் கனடா, பிரிட்டன் உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழக்கூடிய புலம்பெயர் தமிழர்கள் படிப்படியாக அந்நாடுகளில் தமக்கென அரசியல் ரீதியான தலைமைத்துவத்தையும் இருப்பையும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்து மூன்று தசாப்தகாலப்போரை முடிவிற்குக் கொண்டுவந்தபோது அதனை சர்வதேச நாடுகள் வரவேற்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தன.

அவ்வாறிருக்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணையனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறிய தீர்மானம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு வலியுறுத்தும் அதேவேளை, உத்தரவிடும் வகையிலான தீர்மானமாக அமைந்தது.

அதனைப் பொறுத்தமட்டில் எந்தெந்த நாடுகள் எம்மீது அழுத்தம் பிரயோகிக்கின்றன? எந்தெந்த நாடுகளால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன? என்பது குறித்து உற்றுநோக்க வேண்டும். ஏனெனில் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற கனடா, ஜேர்மனி போன்ற பெரும்பாலான நாடுகள் புலம்பெயர் தமிழர்களைத் பெருமளவில் கொண்ட நாடுகளாக இருக்கின்றன.

அதேவேளை இத்தாலி போன்ற நாடுகள் ஏன் அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லையெனின், அங்கு சிங்களவர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். அதுமாத்திரமன்றி மேற்குலக நாடுகள் அவற்றின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஆயுதமாக சுற்றுச் சூழலையும் மனித உரிமைகளையும் பயன்படுத்துகின்றன.

ஆகவே முறையானதொரு திட்டமிடலின் அடிப்படையில் இவ்விவகாரத்தைக் கையாள்வது அவசியமாகும். குறிப்பாக வலுவானதொரு வெளிவிவகாரத் தொடர்பையும் முன்னேற்றகரமான நகர்வுகள் உள்ளடங்கலாக நாட்டில் இடம்பெறும் விடயங்களை நாளாந்த அடிப்படையில் உரியவாறு பொது வெளிக்குக் கொண்டுசென்று சேர்ப்பதற்கான கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும்.

சுமார் 30 வருட காலம் இடம்பெற்ற போரின் வடுக்களை குறுகியகாலப்பகுதியில் முழுமையாக இல்லாமல் செய்ய முடியாது. போரினால் பல்வேறு விதங்களிலும் ஏற்பட்ட பாதிப்புக்கள், இராணுவ மயமாக்கல், காணி அபகரிப்பு உள்ளிட்ட போரின் பின்னரான பிரச்சினைகளுக்குரிய தீர்வு மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அவற்றை மேற்பார்வை செய்வதற்கும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அனைத்து இனங்களினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக 'சுயாதீன நல்லிணக்கப் பேரவை' என்ற கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கான பரிந்துரையை முன்வைக்கின்றேன்.

பாராளுமன்றத்தில் அதற்குரிய சட்டத்தை நிறைவேற்றி, அதனூடாகக் குறித்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதேபோன்று சிறுபான்மையின தமிழ், முஸ்லிம்கள் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து இனக் குழுமத்தையும் உள்வாங்கக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டமைப்புக்களாக மாகாண சபைகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றுக்கான தேர்தல்கள் விரைந்து நடத்தப்பட வேண்டும். குறுங்காலத்தீர்வுகளால் எவ்வித பயனுமில்லை.

மாறாக நிலைபேறான தீர்வை எட்டுவதற்கு குறித்தவொரு வரையறைக்கு அப்பால் சிந்திக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் போர் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து புதிய தொழில்களை ஆரம்பிக்கவோ அல்லது அவர்களது வாழ்க்கையை இலங்கையில் தொடரவோ இல்லை.

ஆனால் இலங்கையின் தமிழ் அரசியல் தலைமைகள் வெளிநாடுகளுக்குச் சென்று புலம்பெயர் தமிழர்களையும் டயஸ்போரா அமைப்புக்களையும் சந்திக்கின்றார்கள். ஆகவே இவ்விரு தரப்பினரில் திட்டங்களையும் யோசனைகளையும் வகுப்பது யார்? என்ற கேள்வி எழுகின்றது.

அதேவேளை அரசாங்கம் யாருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவதென்பது இங்கிருக்கின்ற தமிழ் அரசியல் தலைமைகளுடன் பேசுவதற்கு நிகரானதாகவே இருக்கின்றது.

ஆகவே நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதை முன்னிறுத்திய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இது மிகப்பொருத்தமான தருணமாகும். இப்போது நாம் அதனைச் செய்யாவிட்டால், வெளியகத் தரப்பினர் முந்திக்கொள்வார்கள் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment