இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிரான தடையைக் கோரும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் - News View

Breaking

Sunday, November 14, 2021

இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிரான தடையைக் கோரும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்

நா.தனுஜா

இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்கட்சியின் சார்பில் பிரிட்டனின் மத்திய க்ரொய்டொன் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவான சாரா ஜோன்ஸ், தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணர முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் நீதியும் பொறுப்புக் கூறலும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

'இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவைத் தடை செய்யுங்கள்' என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான தலைமைத்துவத்தை பிரிட்டன் வழங்க வேண்டும். நாம் நீதிக்காகப் போராட வேண்டும். பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கான செயல் வடிவிலான நடவடிக்கைகளே தற்போதைய தேவையாக இருக்கின்றன.

இலங்கையிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்' என்று சாரா ஜோன்ஸ் அக்காணொளியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment