சீன உரக் கப்பல் குறித்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நடவடிக்கை - அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

சீன உரக் கப்பல் குறித்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நடவடிக்கை - அரசாங்கம்

(எம்.மனோசித்ரா)

தரம் தொடர்பான பிரச்சினை காரணமாக இலங்கை கடற்பரப்பில் தரித்துள்ள சீன உரக் கப்பல் குறித்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தீர்வும் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், குறித்த சீன உரக் கப்பல் தொடர்பில் இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் பேசப்படவில்லை. இவ்விவகாரம் தற்போது நீதிமன்ற நடவடிக்கையின் கீழ் உள்ளதால் அது தொடர்பில் பேசவும் முடியாது.

எனவே இது தொடர்பில் நீதிமன்றம் இறுதித் தீர்வினை வழங்கும். அதனை விடுத்து இது அரசியல் ரீதியான தீர்மானமொன்றை எடுத்து செயற்படக்கூடிய விடயமல்ல. நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அதற்கமைய செயற்படுவோம் என்றார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த சேதன உரத்தில் அபாயத்தை ஏற்படுத்தக் கூடிய பற்றீரியாக்கள் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அரசாங்கம் அந்த உரத்தை நிராகரித்தது.

எனினும் உரத்தின் தரம் தொடர்பான பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னரே கடன் சான்றுப்பத்திரம் விடுவிக்கப்பட்டதால், தாம் பாரிய நஷ்டமடைந்துள்ளதாக குறித்த உரக் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மாத்திரமின்றி 8 மில்லியன் டொலர் நஷ்டஈடும் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இரு நிறுவனங்களால் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த சீன நிறுவனத்திற்கு கடன் அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொடுப்பனை வழங்காதிருப்பதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment